Latest News

பாஜக ஆட்சியில் அழிந்து போன 44 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள்!’


தற்போது பா.ஜ.க. அரசு மேற்கொண்ட கொள்கை முடிவால், தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் நலிவடைந்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ திட்டம், விவசாய நிலங்களைப் பறித்து, வேளாண்மைத் தொழிலை நலிவடையச் செய்வதைப்போல, இந்தியாவில் 8 கோடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் சிறு, குறுந் தொழில்களை நசுக்கும் வகையில் உள்ளது பா.ஜ.க அரசின் கொள்கை முடிவு.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் தொழில் துறையின் பங்கு 8 விழுக்காடாக உள்ளது. அதைப்போல, இந்தியாவின் ஏற்றுமதியில் 43 விழுக்காடு பங்களிக்கிறது. போதிய நிதி ஆதாரம் இல்லாமை, மின்வெட்டு, அதிக வட்டி , கடன் கிடைக்காமை மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான தொகை குறித்த காலத்தில் கிடைக்காமை போன்ற காரணங்களால் சுமார் 4.68 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நட்டமடைந்து விட்டன.

தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் நலிந்துள்ளன. இந்நிலையில், தற்போது பா.ஜ.க. அரசு மேற்கொண்ட கொள்கை முடிவால், சிறு, குறுந் தொழில்கள் முழுவதுமாக நலிவடைந்து, கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு ஆணை (S.O. 998 (E), 10.04.2015), ஊறுகாய், ரொட்டி, மெழுகுவர்த்திகள், சலவை உப்பு, தீப்பெட்டி, பட்டாசு, ஊதுபத்தி, கண்ணாடி வளையல், மரச்சாமான்கள், ஸ்டீல் மேசை, நற்காலி, அலமாரிகள், அலுமனியப் பொருட்கள் மற்றும் பயிற்சி நோட்டுப் புத்தகங்கள், பதிவேடுகள் உள்ளிட்ட 20 பொருட்களை சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

வேளாண்மைத் தொழிலுக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான மக்கள் சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்புப் பெற்று இருக்கிறார்கள். சிறு, குறுந்தொழில்கள் சந்திக்கும் நெருக்கடிகளைக் களைந்து, அவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கின்றன. ஆனால், சிறு, குறுந்தொழில்களை, பன்னாட்டு பெருநிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்கு பா.ஜ.க. அரசு வாசலை திறந்து விட்டிருக்கிறது.

தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி மற்றும் ஊறுகாய் தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களை அழித்துதான் இந்தியா வளர்ச்சி காண வேண்டுமா? கிராமப்புற பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்று, பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா வழிகாட்டினார். சிறு, குறுந்தொழில்கள் மூலம் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் வேலைவாய்ப்புப் பெற்று, கௌரவமான வாழ்க்கை நடத்துவதை பா.ஜ.க. அரசு சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சிறு, குறுந்தொழில்கள் நலிவடைந்தால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்பதை உணர்ந்து, சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து 20 பொருட்களை நீக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.