அயல் நாட்டுக்கு வேலை தேடிச் செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். ஏழைகளாக இருக்கும்பட்சத்தில், குறுகிய காலத்தில் ஓரளவுக்கு வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ளலாம்; கூடப் பிறந்தவர்களை கரையேற்றலாம்; உள்ளூரில் சம்பாதித்து அடைக்க முடியாத கடனை வெளி தேசத்திலேயாவது சம்பாதித்து அடைக்கலாம். இப்படி காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம்.
காரணங்கள் அனைத்துமே சரியானதாக, உண்மையானதாகவே இருக்கட்டும். ஆனால், அதன் பிறகான வழிமுறைகள், வேலை, வாழ்க்கை தரம் போன்றவைகளும் ஒழுங்காக, முறையானதாக இருக்க வேண்டுமல்லவா! ஓர் ஆண் வெளிநாட்டு வேலைக்கு போகப் போவதாய் இருந்தால், அதன் வழிமுறைகள், எந்த நாடு, என்ன வேலை, சம்பளம், தங்கும் இடம், எவ்வளவு காலம் என, இவை எல்லாவற்றையும், அந்த வீட்டு பெண்ணும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஒரு காரியத்தை, வேறு வழியே இல்லை என்ற மனநிலையில் இருக்கும், ஒரு ஆணை விட, ஒரு பெண் வெகு இயல்பாக தெளிவாக கையாளுவாள் என்பதும் அறிந்த விஷயம். அப்பா, கணவன், சகோதரன் என்று, வீட்டின் பொருளாதாரமே நம்பி இருக்கும் இவர்கள், நாட்டை விட்டு வேறு இடம் தேடி சம்பாதிக்கப் போகும்போது, பெண்களும் எதுவும் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்வதில்லை.
ஆண்களும் மிகவும் பரிதாபப்படும் நிலையில் தான் உள்ளனர். முகவர்களிடத்தில் பணம் கட்டுவதில் ஆரம்பிக்கிறது, அலைச்சல்களும், உளைச்சல்களும், வீட்டின் நகை, நிலம் ஆகியவற்றை விற்று, முகவருக்கு கொடுத்து, அவர்கள் பின்னாலேயே நாயாய் பேயாய் அலைந்து, ஒருவழியாக விமானம் ஏறி, அயல்நாட்டு மண்ணில் கால் வைக்கும்போது தான் தெரியும், நம் விதியின் விளையாட்டு.
சமீபத்தில், மலேசியாவிற்கு இப்படி கடன் பட்டு, சென்ற சிவகாசி பகுதியை சேர்ந்த அருண்பிரசாத் என்ற பி.பி.ஏ., பட்டதாரி. கணினி வேலை என்று முகவரிடம் பணம் கட்டி அங்கு சென்றுள்ளார். ஆனால், கொடுக்கப்பட்ட வேலையோ கோல்ப் பந்துகளை பொறுக்கிப் போடும் வேலை தான். மீண்டும் உடனே திரும்பி வர முடியாதபடி பாஸ்போர்ட், முகவரின் வசம். ஏதாவது வேலை செய்து, உள்ளூரில் பட்ட கடனையாவது அடைத்தாகணுமே என்ற கட்டாயத்தினால் கிடைக்கிற ஏதாவது வேலையை செய்து கொண்டிருப்போர் பலர். அருண்பிரசாத் விஷயத்தில் அதுவும் நடக்காதபடி விசாவும் முடிகிற நாளும் நெருங்கி விட, தவித்துப் போயிருக்கிறார். இங்கே வீட்டிற்கு தெரிவித்தால் என்ன செய்ய முடியும்? முகவர் யார், என்ன விவரம், இங்கே உள்ளூரில் தொடர்பானவர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ராமநாதபுரம், கீழக்கரை, சிவகங்கை, விருதுநகர் போன்ற பகுதிகளிலிருந்து தான், அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்கின்றனர். ஆண்களே படிப்பு குறைச்சலாக இருக்கும்போது, வீட்டில் இருக்கும் இந்த பகுதி பெண்கள், எந்த அளவுக்கு படிப்போடு இருப்பர்?வெளிநாடு செல்ல வேண்டும், அதுவும் ஒரு பிழைப்பைத் தேடி என்றபோது எல்லாவற்றையும் சரியாக சட்டத்திற்கு உட்பட்டு செய்ய வேண்டும். முகவர்கள் அனைவரும் தேவ துாதர்கள் அல்ல, எதை சொன்னாலும் நாம் தலையாட்டிக் கொள்வதற்கு.
நம் வீட்டிலிருந்து ஒருவர் வெளிநாடு செல்வதாக இருக்கும்பட்சத்தில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.
முகவர்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். எந்த நாட்டிற்கு, என்ன வேலைக்கு, என்ன சம்பளத்திற்கு போன்ற விவரங்களையும், செல்லும் வெளிநாட்டு துாதரகத்துடன் தொடர்பு எண்களை யும், வீட்டில் உள்ள பெண்கள் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம், கணவன் மீது சந்தேகப்பட்டு, 1,000 கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்கும் மனைவிமார்கள், தன் கணவன் வெளிநாடு போகிறான் என்றதும், ‘ஆஹா, எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும். பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்’ என்று கனவு காண ஆரம்பித்து விடுகின்றனர். அதே 1,000 கேள்விகளை கணவனின் வேலை சம்பந்தமாகவும் கேளுங்கள். வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலானோர், மனச்சோர்வுடன் தான் உள்ளனர். பணம் பிடுங்கும் போலி முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வாங்கிக் கொடுக்கும் திருட்டு விசாவில் வந்து சிக்கி, வாழ்வை தொலைத்து விட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டப்பூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால், சட்ட விரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக் கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.
என்றோ ஒரு நாள் பிறந்த மண்ணிற்கு வந்து, ‘நான் இவ்வளவு செல்வாக்குடன் இருக்கிறேன்’ என்று, மற்றவர்களுக்கு காட்டிக் கொண்டு, மீதி நாட்களில் மனக்குமுறலுடன், அயல்நாட்டில் அல்லாடும் ஆயிரக்கணக்கான அன்பானவர்களுக்காக இந்த பதிவு.போலி முகவர்கள், வெளிநாட்டு முதலாளிகள், மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து செய்கிற வேலைகளை அந்த நாட்டு அரசும் கண்டுகொள்வதில்லை.இந்திய தொழிலாளர்களின் நலனை பற்றி கவலைப்படாத இந்திய துாதரகம், இன்னும் சட்டத் திட்டங்களை கடுமையாக்கினாலும், நாமே பார்த்து நம்மை சரி செய்து கொள்ளும் வரை, இந்த துன்பங்களிலிருந்து விடுதலையும் நமக்கு கிடைக்கப் போவதில்லை.
வான்மதி -பத்திரிகையாளர்
No comments:
Post a Comment