8¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.
எதிர்பார்ப்பு
உயர்கல்வியில் சேர்வதற்கு பிளஸ்–2 மதிப்பெண் அவசியம் தேவை. அந்த மதிப்பெண் அதிகமாக இருந்தால் உயர்கல்வியில் சேர்வது எளிது. குறைந்த மதிப்பெண் என்றால் சற்று சிரமப்பட்டுதான் சேரவேண்டும். மிகக்குறைந்த மதிப்பெண் என்றால் உயர்கல்வியில் சேர்ந்து படிப்பது சிரமம்.
அதனால் பிளஸ்–2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை அனைத்து மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். மேலும் பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை நமது பள்ளிக்கூடத்தில் படித்தமாணவர் முதலிடம் பெறவேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
நாளை முடிவு வெளியீடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5–ந் தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்–2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 18–ந் தேதி முடிவடைந்தது. பின்னர் டேட்டா சென்டரில் கம்ப்யூட்டர் மூலம் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கப்பட்டு வருகிறது.
பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) முடிவு வெளியாகிறது. அதாவது கடந்த வருடத்தை விட 2 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்படுகிறது.
மதிப்பெண் தெரிந்து கொள்ளலாம்
மாணவ–மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின்போது மதிப்பெண்களும் தெரிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
கலெக்டர் அலுவலகங்கள்
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.
தற்காலிக சான்றிதழ்
மாணவர்களின் வசதிக்காக தற்காலிக சான்றிதழ் (புரவிஷனல் சர்டிபிகேட்) முதல் முதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா இந்த திட்டத்தை அரசின் முடிவுபடி அறிவித்தார். 14–ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியரிடம், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேலும், வருகிற 18–ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேவைப்படின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களைஅளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 21–ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment