காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்தும், மேகதாதுவில் அணையை விரைந்து கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கர்நாடகத்தில் 18–ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடைபெறும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் இந்த முழுஅடைப்பு காரணமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்த முழுஅடைப்புக்கு கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி) ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400–க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் இன்று பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது என தெரிகிறது. அதேப் போல் அரசு ஊழியர்கள் சங்கங்களும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில், முழுஅடைப்புக்கு ஆதரவு கோரி பல்வேறு கன்னட அமைப்பினர் நேற்று மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
No comments:
Post a Comment