கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன், தம்பியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக அண்ணனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை கீழ்பாக்கம் புல்லாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் ரமணய்யா (70). இவரது மனைவி வெங்கடசுப்பம்மாள், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வெங்கடேஸ்வரலு (43), வெங்கடரத்தினம் (34) ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.வெங்கடேஸ்வரலு கார் டிரைவர். திருமணமாகி மனைவி, 3 மகள்களுடன் அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசிக்கிறார். ரமணய்யாவின் மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் வசித்து வருகிறார். வெங்கடரத்தினத்துக்கு திருமணமாகவில்லை. அதனால் தந்தையுடன் வசித்து வந்தார். வெங்கடரத்தினம், திருவிக நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஸ்வரலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது வெங்கடரத்தினத்துக்கு தெரியவர, அண்ணனை கடுமையாக கண்டித்துள்ளார். அதற்கு அவர், “நீ உன் வேலையை பார், என் வழியில் குறுக்கிடாதே என கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவியும் கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரமணய்யா இறந்து விட்டார். அதனால் சொத்துக்கு ஆசைப்பட்டு இரவில் வெங்கடரத்தினத்துடன் வெங்கடேஸ்வரலு தூங்குவது வழக்கம். அதுபோன்று நேற்றிரவு இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். அப்போது கள்ளத்தொடர்பு சம்பந்தமாக மீண்டும் தகராறு எழுந்தது. அப்போது, “இனிமேல் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என வெங்கடரத்தினம் எச்சரித்துள்ளார். சிறிது நேரத்தில் வெங்கடரத்தினம் தூங்கி விட்டார். வெங்கடேஸ்வரலு தூக்கம் வராமல் ஆத்திரத்துடன் கண்விழித்து கொண்டே இருந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில், “இனியும் விட்டு வைத்தால் நம்மை கொன்று விடுவான், அவனுக்கு முன்பாக அவனை நாம் தீர்த்து கட்டி விட வேண்டும்’ என முடிவு செய்து அங்கு கிடந்த ஆட்டுக்கல்லை எடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வெங்கடரத்தினத்தின் தலையில் ஓங்கி போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் வெங்கடரத்தினம் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து ரத்த கறையுடன் கீழ்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் வெங்கடேஸ்வரலு சரணடைந்தார். துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து வெங்கடேஸ்வரலுவை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment