அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக புகார் அளிக்க 1031 என்ற எண் கொண்ட ஹெல்ப் லைன் மையத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.
முதலாவதாக இந்த எண்ணை டயல் செய்த கெஜ்ரிவால், உள்ளூர் உணவுப்பொருள் அதிகாரி பற்றி விளையாட்டாக புகார் கூறியபோது தொடக்க விழாவை காணவந்த அதிகாரிகளும், பொதுமக்களும் உற்சாகமாகி எழுப்பிய சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், கடந்த முறை 49 நாட்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாங்கள் ஊழலுக்கு எதிரான உதவி மையத்தை ஏற்படுத்தி இருந்தோம். இம்முறையும், புதுப்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான உதவி மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். இந்த எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.
தவறு செய்பவர்கள் எங்கள் கட்சிக்காரர்களே ஆனாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் எங்களுக்கு உள்ளது. நாளை மணிஷ் சிசோடியா (டெல்லி துணை முதல் மந்திரி) ஊழல் செய்ததாக தெரியவந்தால் அவர் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும். நானே தவறு செய்தாலும் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊழல் இல்லாத இந்தியாவின் 5 தலைநகரங்களில் ஒன்றாக இன்னும் 5 ஆண்டுகளில் டெல்லியை மாற்றிக் காட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment