பெண்கள் தனியே இருக்கும் வீடுகளைக் குறிவைத்தே பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன. நகர்ப்புற வாழ்க்கையில் அதுவும் அப்பாட்மெண்ட் போன்ற இடங்களில் பாதுகாப்பின்மைக்கு என்னக் காரணம்? அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை ஏகப்பட்ட சிக்கல்களோடு தான் நம் முன்னால் நிற்கிறது. இந்த சூழலில் பாதுகாப்பாய் இருப்பது நமது கையில் தான் இருக்கிறது. கீழே உள்ள சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பெரும்பாலான சிக்கல்கள் விலகி ஓடிவிடும்.
• முதலில் ஒரு காலர் ஐடி வாங்கிக் கொள்ளுங்கள். யாரெல்லாம் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் எனும் விஷயம் தெரியவரும். உங்கள் வீட்டு குப்பைகளில் கூட கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரைப் பற்றிய, வங்கிக் கணக்கு பற்றிய விஷயங்களெல்லாம் அதில் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
• யாராவது போன் பண்ணினால் உடனே உங்கள் ஜாதகத்தை அவரிடம் சொல்லாதீர்கள். அவர்கள் யார், என்ன சமாச்சாரம் என்பதையெல்லாம் முதலில் கேட்டு விட்டு தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அடிக்கடி ராங் கால் வருகிறதா ? தொலைபேசி நிறுவனத்திற்கு கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். வீடு காலியாய் இருக்கிறதா ? ஆட்கள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட ராங் கால்கள் வரும் உஷார்.
• கார் கீயில் வீட்டுச் சாவியையும் போட்டு வைக்காதீர்கள். எங்கேயாவது வேலட் பார்க்கிங் சமயத்தில் கூட உங்கள் கீ டூப்ளிகேட் செய்யப்படலாம். உங்கள் கார் எண்ணை வைத்து உங்கள் விலாசம் கண்டுபிடிக்கப் படலாம் !
• கழற்றிப் போட்டிருக்கும் ஷூவிற்குள், மிதியடிக்குக் கீழே, செடித்தொட்டிக்கு அடியில், கதவுக்கு மேல் இப்படிப்பட்ட இடத்திலெல்லாம் சாவியை வைத்துச் செல்லாதீர்கள். இதெல்லாம் ஹைதர் கால டெக்னிக்.
• வசதியிருப்பவர்கள் செக்யூரிடி கேமராக்களையும் வீடுகளில் பொருத்தலாம். வீட்டில் குழந்தைகளை ஆயா நன்றாகக் கவனிக்கிறாரா என்பது முதல், யாராவது அத்துமீறி நுழைகிறார்களா என்பது வரை சகலத்தையும் அதில் பிடித்துவிடலாம்.
• எப்போதும் செல்போன் கையிலேயே இருக்கட்டும். அதில் லோக்கல் போலீஸ் நம்பர், ஆம்புலன்ஸ் நம்பர், அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் நம்பர், நம்பிக்கையான சிலருடைய நம்பர்கள் எல்லாம் தவறாமல் இருக்கட்டும். மறக்காம சார்ஜ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
• சந்தேகத்துக்கு இடமான நபர் தென்பட்டால் உடனடியாக போலீஸுக்குத் தெரியப்படுத்துங்கள். கூடவே அப்பார்ட்மெண்ட் நிர்வாகம், வாட்ச்மேன் அனைவரையும் உஷார் படுத்திவிடுங்கள்.
• நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து விடுதல் உசிதம். கொஞ்சம் தேவைக்கேற்ற பணம் மட்டும் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது.
• யாராவது வந்து உங்கள் பக்கத்து வீட்டுக் காரர்களைப் பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்டால் உஷாராகிவிடுங்கள். அவர்களிடம் கவனமாய் இருங்கள். நம்பிக்கையற்றவராய் தெரிந்தால் அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் போய் செய்திகளை வாங்கச் சொல்லுங்கள். முடிந்தால் செல்போனில் நைசாக அவனை ஒரு படம் பிடித்துக் கொள்ளுங்கள். மறக்காமல் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment