Latest News

மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்..!


‘‘எல்லா வேலைகளும் முடிந்த பிறகு, இரவு 11 மணி அளவில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தற்செயலாக கணவரின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கவனித்தேன். ‘தெரியலயே… எங்கயாவது இடிச்சுக்கிட்டேனோ என்னவோ…’ என்று கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். சில நிமிடங்களில் ரத்தம் இன்னும் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏற்கெனவே, உயர் ரத்த அழுத்தத்துக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் என்பதால் எனக்கு பயமாகிவிட்டது. ‘அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. சில்லு மூக்கு உடைஞ்சிருக்கும்’ என்று துண்டில் துடைத்துக்கொண்டு என்னை சமாதானப்படுத்தினார். ஆனால், துண்டு முழுக்க ரத்தமயமாக இருப்பதைப் பார்த்ததும் பயமும் பதற்றமும் அதிகமாகிவிட்டது. பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குப் பிடிவாதமாக அழைத்துச் சென்றேன்.

‘ரத்த அழுத்தம் தாங்காமல் தலைக்குள் நரம்பு ஒன்று வெடித்துவிட்டது… கொஞ்சம் தாமதமாகியிருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்’ என்று உடனடியாக ஐ.சி.யு.வில் சேர்த்தார்கள். அடுத்த நாள் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, இப்போது குணமடைந்துவிட்டார் என்றாலும் ஐ.சி.யு. வாசலில் அன்று இரவு முழுவதும் திகிலோடு விழித்திருந்ததை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது…’- மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் தீபா நாகராணி பகிர்ந்துகொண்ட உண்மைச் சம்பவம் இது.

நரம்பியல் மருத்துவரான லட்சுமி நரசிம்மனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘இந்தியாவில் ஒருபக்கம் நோய்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் அலட்சியத்தாலோ, அறியாமையாலோ இதுபோன்ற விபரீதங்களும் அதிகமாகி வருகின்றன. இது கவலைக்குரிய விஷயம். உயர் ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சையை பாதியில் நிறுத்தியதால்தான் இத்தனை பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறார்கள். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சரி… மாரடைப்பாக இருந்தாலும் சரி… நாமே எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதுதான் முக்கியமான விஷயம். மருத்துவரின் ஆலோசனை அவசி யம், மருத்துவர் கொடுக்கிற சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இடையில் சரியாகிவிட்டது என்று நிறுத்தவே கூடாது. இந்த நோய்கள், வாழ்க்கை முழுவதும் நம்முட னேதான் இருக்கும். அந்த நோயை தினமும் நாம் கவனித்துத்தான் ஆக வேண்டும். ‘தினமும் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கிறதே… ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறதே… அடிக்கடி பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறதே… மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்கிறதே’ என்றெல்லாம் எரிச்சலாகத்தான் இருக்கும். ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ வேண்டு மானால், அந்த சிகிச்சைகளைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’’ என்கிறார்.

தலைக்குள் நரம்பு வெடித்தால் மூக்கில் இதுபோல ரத்தம் வருமா?

‘‘ரத்த அழுத்தம் தாங்காமல் நரம்பு வெடித்தால் வலிப்பு, பார்வை மங்குவது, கை, கால்கள் செயல் இழப்பது, கடுமையான தலைவலி, கோமா நிலைக்குச் செல்வது போன்ற அறிகுறிகள்தான் வழக்கமாகத் தோன்றும். இது மிகவும் அபூர்வமான அறிகுறி. 10 ஆயிரம் பேரில் ஒருவருக்குத்தான் இதுபோல மூக்கில் ரத்தம் வரும்’’ என விளக்குகிற டாக்டர், நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விதிகளை வலியுறுத்திச் சொல்கிறார்.

1 சிகிச்சையைக் கைவிடாதீர்கள்!

தொடர் சிகிச்சைகளின் காரணமாக நோய் குணமாகிவிட்டது போல சில நேரங்களில் தோன்றும். அது நீங்கள் ஒழுங்காக சிகிச்சையைப் பின்பற்றி வருகிறீர்கள் என்பதன் அடையாளம்தானே தவிர, நோய் குணமாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. அதனால் இனி நம்மை ஒன்றும் செய்யாது என்று அசட்டு நம்பிக்கை கொள்வது ஆபத்தானது.

2 தொடர்பு எல்லைக்கு வெளியே போகாதீர்கள்!

சமீபத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவர், ‘டாக்டர் நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரையைத்தான் இத்தனை நாளா சாப்பிட்டுட்டு இருந்தேன். நல்லாத்தான் இருந்தது. இப்போ ஒரு மாசமா வலி அதிகமாகிருச்சு’ என்றார். அவரது ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கிப் பார்த்த எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. 2004ம் ஆண்டு அவருக்கு அந்த மருந்தை எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதைத்தான் அவர் 10 வருடங்களுக்கு மேலாக என்னிடம் மீண்டும் ஆலோசனைக்குக் கூட வராமலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நாளுக்குத்தான் அந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அதற்கு முன்பாக சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது, அதற்குப் பிறகு மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும் டாக்டரின் அறிவுரை இல்லாமல் சாப்பிடக் கூடாது.

3 அளவு தாண்டாதீர்கள்!

ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி. ஒரு மாத்திரை சாப்பிட்டு தலைவலி குறையாததால் மீண்டும் ஒரு தலைவலி மாத்திரை சாப்பிட்டிருக்கிறார். சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கும்போது அவரது இரண்டு கைகளும் கருப்பாகி, அழுகிப் போன நிலைக்கு வந்துவிட்டது. மருத்துவரின் ஆலோசனையை மீறி நாம் சாப்பிடுகிற ஒரு சின்ன மாத்திரை எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

4 ஆலோசனை கேட்காதீர்கள்!

கால் வலி இருப்பதாக நண்பரிடம் சொல்லியிருக்கிறார் ஒருவர். உடனே அவர், ‘நானும் கால் வலிக்குத்தான் மாத்திரை சாப்பிடுகிறேன்’ என்று அதே மாத்திரைகளை மருந்துக்கடையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மாத்திரை அலர்ஜியாகி, அவர் கோமாவுக்குப் போய்விட்டார். விசாரித்த பிறகுதான் தெரிந்தது… ஆலோசனை கேட்டவருக்கு சாதாரண கால்வலிதான். மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தவருக்கு சர்க்கரை நோயோடு கால் வலி இருந்திருக்கிறது. ஒரு தவறான ஆலோசனையால் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் விரயமாகி, தேவையில்லாத சிரமமும்தான் கடைசியில் மிச்சமானது. கண்ட நபர்களிடமும் மருத்துவ ஆலோசனை கேட்கக் கூடாது… தவறான ஆலோசனை கொடுக்கவும் கூடாது.

5 விதிகளை மீறாதீர்கள்!

வலிப்பு நோயாளி ஒருவரிடம் ‘வாகனம் ஓட்ட வேண்டாம்’ என்று சொல்லியிருந்தேன். ஆனால், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வருவதற்காக காரில் சென்றவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுவிட்டது. கார் தறிகெட்டு ஓடி மூன்று மாணவர்களுக்குப் படுகாயம். நல்லவேளையாக ஒரு மரத்தில் மோதி கார் நின்றிருக்கிறது. மக்கள் ஓடி வந்து பார்த்தால் அவர் வலிப்பு வந்து சுயநினைவு இல்லா மல் கை, கால் இழுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.இது டாக்டரின் அட்வைஸை மீறி நடப்பதால் வந்த விளைவு. அலட்சியம், அதிமேதாவித்தனம் போன்ற காரணங்களால் நோயாளி தன்னைத்தானே டாக்டராக நினைத்துக் கொள்ளக் கூடாது. அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதல்ல!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.