சென்னையில் டாக்டர், வக்கீல் படிப்பிற்கான பட்டங்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பார் கவுன்சில் செயலர் புகார்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி சென்னை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கடந்த மாதம் 25–ந் தேதி அன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில், 3 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் போலியாக உள்ளது, ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பதாரர்கள் சென்னையைச் சேர்ந்த அருண்குமார், அழகிரி மற்றும் மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேர் மீதும் சட்டப்பூர்வ நவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ரவிக்குமார், இணை கமிஷனர் (பொறுப்பு) சண்முகவேல், துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் கீதா, அழகு, சப்–இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, கீதா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலி சான்றிதழ் அச்சடிப்பு
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. புகார் கூறப்பட்டுள்ள அருண்குமார், அழகிரி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் போலி வக்கீல் படிப்பு சான்றிதழ்களை பார்கவுன்சிலில் தாக்கல் செய்தது தெரிய வந்தது. சட்டக் கல்லூரிக்கு சென்று படிக்காமலேயே இவர்கள் பணம் கொடுத்து வக்கீல் படிப்பு சான்றிதழ்களை வாங்கிய அதிர்ச்சி தகவல்களை போலீசார் சேகரித்தனர்.
இவர்களுக்கு போலி சான்றிதழ்களை வழங்கியது கோவை, காந்திபுரம், 3–வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரி (வயது 32) மற்றும், சேலம் குரங்குச்சாவடியில் வசிக்கும் கணேஷ்பிரபு(28) என்றும் தெரிய வந்தது.
CDBEEB06-7452-4F6B-9473-86CC9EE6056C_L_styvpf.gif3 பேர் கைது
சண்முகசுந்தரியும், கணேஷ்பிரபுவும் நைசாக விசாரணைக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வக்கீல் படிப்பு சான்றிதழ் போலியானது என்பதை ஒப்புக்கொண்டனர். இதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலி சான்றிதழ் என்று தெரிந்தும் அதை பணம் கொடுத்து வாங்கி, அதன் மூலம் பார்கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சித்த குற்றத்திற்காக அருண்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இந்த போலி வக்கீல் சான்றிதழ் தயாரிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் சண்முகசுந்தரிதான். அவரிடம் இருந்து வக்கீல் படிப்பு போலி சான்றிதழ் மட்டும் அல்லாமல், டாக்டர், என்ஜினீயர் பட்டப்படிப்பு உள்ளிட்ட ஏராளமான சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போலி சான்றிதழ்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றை இணை கமிஷனர் சண்முகவேல் நேரில் பார்வையிட்டார். பின்னர் போலி சான்றிதழ் அச்சடிப்பு கும்பல் செயல்படும் விதம் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:–
போலி வக்கீல்
இந்த போலி சான்றிதழ் கும்பலின் தலைவியாக செயல்பட்டவர் சண்முகசுந்தரிதான். அவரும் போலி வக்கீல் சான்றிதழ் கொடுத்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் முதலில் மாட்ட வில்லை. அவரது கணவருக்கும் போலி வக்கீல் சான்றிதழ் பெற்று கொடுத்துள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக இந்த போலி சான்றிதழ் விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக இவர் ஹைமார்க் எஜூகேசனல் இன்ஸ்டிடியூசன் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோவையில் உள்ளது. சென்னை ஆலந்தூரில் கிளை அலுவலகம் செயல்படுகிறது. மேலும் தமிழகத்தில் 14 இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
இந்த நிறுவனம் சார்பில் பத்திரிகைகளில் நூதனமான முறையில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 8–வது வகுப்பு படித்தவர் பட்டதாரி ஆகலாம். பட்டதாரி வக்கீல் ஆகலாம். 3 மாதங்களில் நீங்கள் விரும்பிய பாடத்தில் பட்டம் பெறலாம். நீங்கள் கல்லூரிக்கே போக வேண்டியதில்லை. பட்டம் உங்களை தேடி வரும். இதுபோல கவர்ச்சியான விளம்பரங்களை செய்து நிறைய பேரிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பட்டங்களை வாரி, வாரி வழங்கி இருக்கிறார்கள்.
உ.பி. பல்கலைக்கழகம்
உ.பி. மாநிலத்தில் உள்ள பந்தேல்கேட் பல்கலைக்கழகம் வழங்கியது போல போலி சான்றிதழ்களை இவர்கள் தயாரித்து கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் கொடுத்துள்ள போலி சான்றிதழ்கள் டெல்லியில் அச்சிடப்பட்டுள்ளது. அமீர்சிங் என்பவர் இந்த போலி சான்றிதழ்களை அச்சிட்டு கொடுத்துள்ளார். இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பார்கவுசிலில் பதிவு செய்ய முற்படும்போது, இவர்கள் கொடுக்கும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக, குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் போது, அந்த சான்றிதழ்களை உண்மையானவைதான் என்று சொல்வதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழக ஊழியர்களையும் பணம் கொடுத்து தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்.
பந்தல்கேட் பல்கலைக்கழகத்தைப் போன்று, ஜான்சி பல்கலைக்கழகம், கான்பூர் பல்கலைக்கழகம், லக்னோ மாநில எஜூகேசன்போர்டு போன்ற பல பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி நிறுவனங்களுடன் இவர்கள் தொடர்பு வைத்துள்ளனர். இவர்களிடம் போலி வக்கீல் சான்றிதழ்களை பெற்று 10 பேர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரில் கூறப்பட்டுள்ள அழகிரி, கார்த்திகேயன் ஆகியோரையும் கைது செய்ய தேடி வருகிறோம்.
பா.ம.க. பிரமுகர்
கைது செய்யப்பட்டுள்ள சண்முகசுந்தரி பி.சி.ஏ. படித்தவர். ஆனால் இவர் போலி வக்கீல் மற்றும் எம்.பி.ஏ. படிப்பு சான்றிதழ்களை பெற்றுள்ளார். இவர் தன்னை வக்கீல் என்று விசிட்டிங் கார்டு போட்டுள்ளார். வக்கீல் சின்னம் பொறித்த காரில்தான் இவர் வலம் வந்தார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் மகளிர் அணி மாநில துணை தலைவி என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் இவர் அந்த கட்சிப்பதவியில் இருக்கிராறா? அல்லது ஏமாற்றுகிராறா? என்பதை அந்த கட்சியினர்தான் தெரிவிக்க வேண்டும்.
சண்முகசுந்தரி உள்ளிட்ட கைதாகியுள்ள 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளோம். அந்த விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, உதவி கமிஷனர் கண்ணனும் உடன் இருந்தார்.
பதவி உயர்வுக்காக போலி பட்டங்களை பெற்ற அதிகாரிகள் சிக்குகிறார்கள்
போலி பெண் வக்கீல் சண்முகசுந்தரியிடம், நிறைய அரசு அதிகாரிகள் கூட லட்சக்கணக்கில் பணத்தை வாரி இரைத்து போலி வக்கீல் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் உயர் படிப்பு சான்றிதழ்களை வாங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. சண்முகசுந்தரியிடம் பெற்ற போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து, பதவி உயர்வும் அரசு அதிகாரிகள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் கூட, பந்தாவுக்காகவும், தனது ஓய்வு காலத்தில் வக்கீல் என்ற போர்வையில் வலம் வரவும் போலி சான்றிதழ் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சண்முகசுந்தரி தான் யார், யாருக்கு போலி சான்றிதழ் கொடுத்துள்ளார், எவ்வளவு பணம் பெற்றுள்ளார் என்பன போன்ற விவரங்களை படத்துடன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ளார். லேப்டாப்பை ஆய்வு செய்து இந்த விவரங்களை போலீசார் சேகரிக்க உள்ளனர். போலி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு பெற்றவர்கள், வசமாக மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் கொடுத்து போலி வக்கீல் சான்றிதழ் பெற்ற அருண்குமார்
கைதாகியுள்ள அருண்குமார், போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் போலீஸ் நிலையத்தில் வக்கீல் என்று பந்தா காட்டுவதற்காகவே, இந்த போலி வக்கீல் சான்றிதழை பெற்றதாக தெரிவித்துள்ளார். அவர் ரூ.5 லட்சம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்றதாக தெரிய வந்துள்ளது. வக்கீல், டாக்டர் சான்றிதழுக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயம் செய்துள்ளனர். என்ஜினீயரிங் சான்றிதழ் விலை ரூ.3 லட்சம். மற்ற சான்றிதழ்கள் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று நோக்கம் போல விற்றுள்ளனர்.
No comments:
Post a Comment