தேர்வு முடிந்துவிட்டாலும் முடிவுகள் வரும் வரையில் திக்திக்கென்ற மனநிலையிலேயே இருப்பார்கள் பிளஸ்2 மாணவர்கள். ஆனால், ரொம்பத் தெளிவாக இருக்கிறார் தேனி மாணவி உதய கீர்த்திகா. “விண்வெளிக்குப் போக வேண்டும். அதுமட்டுமே என் லட்சியம். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்” என்று சொல்லும் இவர், அதற்கு முழுத் தகுதி பெற்றவர் என்று சான்றளிக்கிறார்கள் ஆசிரியர்கள்.
இஸ்ரோ தந்த பரிசு
இளமையிலேயே அறிவியல் ஆர்வம் கொண்ட உதய கீர்த்திகா, 2011-ம் ஆண்டு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் வென்றவர். அடுத்து 2012-ம் ஆண்டு இஸ்ரோ சார்பில் ‘சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்தார்.
2013-ம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 487 மதிப்பெண்கள் பெற்று தேனி கான்வெண்ட் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த இவர், அறிவியல் பாடத்தில் சென்டம் அடித்திருந்தார். ஏழ்மையான குடும்பம்தான் இவருடையது. இவருடைய அப்பா அல்லிநகரம் தாமோதரன் எழுத்தார்வம் கொண்டவர் என்பதால், நிறையப் புத்தகங்களைப் படிப்பதோடு, இவருக்கும் வாசிப்புப் பழக்கத்தைத் தந்துள்ளார். ஆகவே விண்வெளி தொடர்பான கதைகளையும், துணுக்குகளையும் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்துள்ளார் உதய கீர்த்திகா. 2014-ம் ஆண்டு இஸ்ரோ நடத்திய ‘வழி நடத்தும் விண்வெளி’ என்ற கட்டுரைப் போட்டியில் மீண்டும் முதல் பரிசு பெற்றார்.
“நிலவைக் காட்டி அப்பா கதை சொன்ன காலத்திலேயே, என்னை நிலாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கப்பான்னு அடம்பிடிச்சிருக்கேன். 9-ம் வகுப்புப் படித்தபோது, எந்தத் துறையைத் தேர்வு செய்தால் என் சுபாவத்துக்கு நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, விண்வெளி ஆராய்ச்சி தான் என்ற முடிவுக்கு வந்தேன்” என்கிறார் இவர். அதன் பிறகு விண்வெளி, அறிவியல் தொடர்பான எந்தப் போட்டி என்றாலும் முதல் ஆளாகப் பெயர் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ‘அந்தப் போட்டிகளுக்குத் தயாராவதே சுவாரசியமான அனுபவமாக இருந்தது’ என்கிறார் இவர்.
விண்வெளிக்குச் செல்லும் வழி
இஸ்ரோ கட்டுரைப் போட்டிகளில் வென்றதால், இரண்டு முறை மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் உதய கீர்த்திகா. இந்தியாவின் அதி நவீன பி.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களுக்குத் தேவையான கிரையோஜெனி இஞ்ஜின்கள் உள்பட 60 சதவிகிதப் பணிகள் அங்குதான் நடக்கின்றன. அதனை நேரில் பார்த்து விளக்கங்களைப் பெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
அவருடைய ஆர்வத்தைக் க
வனித்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணன், பிளஸ்2 முடித்ததும் ஐ.ஐ.எஸ்.டி. (Indian Institute of Space Science and Technology) யில் சேர். உன் லட்சியத்தை அடைய அது உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். பிளஸ்2 தேர்வுடன், ஐ.ஐ.எஸ்.டி. நுழைவுத் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் உதய கார்த்திகா, இந்த வாரம் நுழைவுத் தேர்வு எழுதுகிறார்.
“பல லட்சம் பேர் எழுதுகிற இந்தத் தேர்வில் நான் தேர்வு பெறுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று சொல்லும் இவர், சமீபத்தில், நெதர்லாந்து நிறுவனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் மனித காலனி ஒன்றை அமைக்க முடிவெடுத்து, 100 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளது பற்றியும், கோவை பொறியியல் மாணவி சாரதா பிரசாத்துக்குக் கிடைத்த வாய்ப்பை பற்றியும் நிறையப் பேசுகிறார்.
“2024-ல் இந்த 100 பேரும் செவ்வாய் கிரகம் செல்வார்கள். அதே காலகட்டத்துக்குள் உரிய கல்வித் தகுதியைப் பெற்று விண்வெளி வீராங்கனையாக, விஞ்ஞானியாக முத்திரை பதிக்க வேண்டும். அதுதான் என் லட்சியம்” என்கிறார் உதய கீர்த்திகா.
அதுமட்டுமல்ல தேனி மாவட்டத்தில் இவரைப் போன்ற ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் சர்வதேச தரத்தில் விண்வெளி தொடர்பான கல்வி நிறுவனத்தையும் தொடங்கும் விருப்பமும் இவருக்கு உள்ளது.
No comments:
Post a Comment