Latest News

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தத்தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நாளை(வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு 11 ஆயிரத்து 827 பள்ளிகளில் நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 50 ஆயிரத்து 429 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வு மொத்தத்தில் 3 ஆயிரத்து 298 மையங்களிலும் நடக்கிறது.

சென்னையில் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 578 பள்ளிக்கூட மாணவர்கள், 209 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் எழுதுகின்றனர்.

புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வுகளை 291 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 48 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வை 9 ஆயிரத்து 703 மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் எழுதுகின்றனர்.

சிறைகளில் தேர்வு மையம்

கடந்த ஆண்டைவிட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை கூடுதலாக 33 ஆயிரத்து 816 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த சில வருடங்களாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினைப் பொறுத்தவரை 33 சிறைவாசிகள் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலும், 97 சிறைவாசிகள் கோவை மத்தியச் சிறையிலும், 111 சிறைவாசிகள் புழல் மத்தியச் சிறையிலும் தேர்வெழுதுகின்றனர்.

உடல் ஊனமுற்றோர்கள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், மற்றும் சுடுதல் ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே, நான்கு சக்கர வாகனங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அதே வாகனங்களில், விடைத்தாள் கட்டுகளை, மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இதனால், வினாத்தாள் உறைகளை மையங்களுக்குக் கொண்டு சேர்த்தல், விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றில் துறைக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் இடர்பாடுகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.

வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை

தமிழ்நாடு முழுவதிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்விற்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும்படை உருவாக்கப்பட்டு தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், பள்ளி உதவி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையின் அரசாணையின்படி அனைத்து இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும் தேர்வு முடியும் நாள் வரை, தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ள உள்ளனர். முக்கியப் பாடங்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் அடங்கிய மேற்பார்வை குழுவினர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் சிறப்புப் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.