டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஏ.சி.சண்முகம் மருத்துவக்கல்லூரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:–
ஏ.சி.சண்முகம் மருத்துவக்கல்லூரியில் 2009–10–ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் இடையே சில கடித போக்குவரத்துகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
இந்த மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை இடையில் ரத்து செய்தால் 2–ம் கட்ட சேர்க்கை பெற்று படித்து வரும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே அந்த மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் வரையறுத்துள்ள விதிமுறைகளை கல்லூரி நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.
பின்னர் 2009–10–ம் ஆண்டில் 2–ம் கட்டமாக அனுமதி பெற்ற மாணவர்கள் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த மாணவர்கள் மீண்டும் இறுதி தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அந்த தேர்வுகள் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற தமிழ்நாட்டுக்கு வெளியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், விதிமுறை மீறலுக்காக ஏ.சி.சண்முகம் கல்லூரி ரூ.5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment