Latest News

பீகாரில் அரசியல் குழப்பம் நீடிப்பு மெஜாரிட்டியை நிரூபிக்க மஞ்சிக்கு கவர்னர் உத்தரவு; சட்டசபையில் 20-ந் தேதி பலப்பரீட்சை


பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்ததை தொடர்ந்து, முதல்–மந்திரி ஜிதன்ராம் மஞ்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் சட்டசபை கட்சித்தலைவராக (முதல்–மந்திரி) நிதிஷ் குமாரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். அவருக்கு காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

ஜனாதிபதியிடம் கோரிக்கை
இதைத்தொடர்ந்து கடந்த 9–ந்தேதி கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ் குமார், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். இதைப்போல மஞ்சியும் கவர்னரை சந்தித்து தனக்கும் மெஜாரிட்டி இருப்பதாக கூறினார்.

இருப்பினும் அரசு அமைக்க கவர்னர் அழைக்காததால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 130 பேருடன் நிதிஷ் குமார் டெல்லி சென்றார். அங்கு ஜனாதிபதி முன் அவர்களை ஆஜர்படுத்திய அவர், அரசு அமைக்கும் விவகாரத்தில் உடனே முடிவு எடுக்க கவர்னரை வலியுறுத்துமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக புதிய முதல்–மந்திரியாக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புதிய முதல்–மந்திரியாக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது.

கவர்னர் உத்தரவு
இந்தநிலையில் பீகார் அரசியலில் முக்கிய திருப்பமாக, சட்டசபையில் முதல்–மந்திரி மஞ்சி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பீகார் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 20–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று கவர்னர் உரையை தொடர்ந்து முதல்–மந்திரி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ரகசிய வாக்கெடுப்பு
முதல்–மந்திரியின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகருக்கும் கவர்னர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கவர்னரின் இந்த உத்தரவு மூலம் பீகாரில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

நிதிஷ் குமார் குற்றச்சாட்டு
இதற்கிடையே மெஜாரிட்டியை நிரூபிக்க மஞ்சிக்கு அதிக அவகாசம் கொடுத்திருப்பதற்காக, பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் நிதிஷ் குமார் கடுமையாக தாக்கி பேசினார். டெல்லியில் இருந்து பாட்னா திரும்பும்முன் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

பீகார் அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டுவதற்கு முதலில் கவர்னரால் ஒரு தாமதம் ஏற்பட்டது. அடுத்ததாக மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு அதிக அவசாகம் மஞ்சிக்கு கொடுத்திருப்பதன் மூலம் மீண்டும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

டெல்லியில் எழுதப்பட்டது
டெல்லியில் உயர்மட்ட ரீதியில் (மோடி) எழுதப்பட்ட கதையை (கால அவகாச விவகாரம்) கவர்னர் பின்பற்றுகிறார். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்கே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இது மோடி–மஞ்சி சந்திப்புக்குப்பின் எடுக்கப்பட்ட முடிவாகும். சட்டசபையில் உடனடி மெஜாரிட்டி சோதனைக்கு முதலில் கவர்னர் சம்மதித்து இருந்தார். ஆனால் மோடி–மஞ்சி சந்திப்புக்குப்பின் அனைத்தும் மாறிவிட்டது. இதற்கான கதை அனைத்தும் டெல்லியில் எழுதப்பட்டு உள்ளது.

மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக தேவைப்பட்டால் 35 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குமாறும், அதற்கு உதவி செய்வதாகவும் மஞ்சியிடம் பா.ஜனதா கூறியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.

இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.