தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை” என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், மதுகுடிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து முயற்சி எடுத்து, குடிப்பதை தடுக்க பிரச்சாரம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வவநாதன் பேசியதாவது: தமிழக அரசு, கள்ள மற்றும் போலி மதுபானங்களை ஒழிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கள்ள சாராய விற்பனை மூலம் சமூக விரோதிகளிடம் சட்ட விரோதமாக பணம் சேருவது கட்டுப்படுத்தப்பட்டு, அரசு கருவூலகத்திற்கு வருவாய் சென்றடைய வழிவகுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மது விலக்கு பற்றியும், மதுவின் தீமைகளைப் பற்றியும் முதல்வர் ஜெயலலிதா உணராதவர் அல்ல. நம்மைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் தங்களது மதுவிலக்கு கொள்கையை முற்றிலும் தளர்த்தி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு கொள்கையை கடைபிடிப்பது நடைமுறையில் தற்போது சாத்தியமில்லை.
தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் மற்றும் விஷச் சாராயம் பெருகி, அதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லா திட்டங்களுக்கும் முன்னோடி மாநிலமாக திகழும் அதிமுக அரசு, நாடு முழுவதும் மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்தினால், அதற்கும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.
கள்ள சாராயம் வடித்தல், தவறான காரணங்களுக்காக சாராவியை பயன்படுத்துதல், போலி மற்றும் இரண்டாம் தர மதுபானங்களை எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழித்திடும் திறமையான ஆயத்தீர்வை நிர்வாகத்தை அளிப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது. இதன் விளைவாக நச்சுத் தன்மை கொண்ட கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளன.
அமலாக்க நடவடிக்கைகளை பலப்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் அதே வேளையில் வருவாய் ஈட்டுதலை நோக்கமாகக் கொள்ளாமல், மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பேணும் எண்ணத்துடன் அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதியுடன் நடந்த விவாதத்தில் அமைச்சர் கூறியதாவது: மது தீமை இல்லை என்று யாரும் கூறவில்லை. மதுவால் தீமைதான். அதை மறுக்க முடியாது. கட்டாயப்படுத்தி மதுவிலக்கை கொண்டு வரும் போது அது வேறு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மது விலக்கு இல்லாத போது நாம் செய்ய முடியாது. மதுகுடிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து முயற்சி எடுத்து குடிப்பதை தடுக்க பிரச்சாரம் செய்யலாம்.
மது குடிப்போரை திருத்துவதற்கும், மதுவின் தீமை குறித்து அவர்களுக்கு சொல்லவும், மதுவின் பிடியில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும் இப்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆட்சிக்கு வரும்போது சிலர் இது பற்றி பேசுவதும், பின்னர் அது பற்றி பேசுவதும் இல்லை. எனவே மதுவிலக்கு என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
No comments:
Post a Comment