திருச்சி: மெக்காவின் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இறந்தனர். மெக்காவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 20 லட்சம் பேர் குவிந்திருந்தனர். நேற்றுமுன்தினம் மெக்கா அருகே மினா நகரில் சாத்தான் மீது கல்வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அவர்கள் அங்குள்ள 3 தூண்களில் கற்களை வீசிக்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 717 பேர் இறந்தனர். இதில், 4 தமிழர்கள் உள்பட 14 பேர் இந்தியர்கள். 4 பேரும் திருச்சி, நெல்லை, நாகை, வேலூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வடகரையை சேர்ந்த சம்சுதீன் முகமது இப்ராகிம்(65) என்பவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவந்தது.
மற்ற 3 பேர் பற்றிய விவரம்: திருச்சி தென்னூர் அண்ணாநகர் சிவப்பிரகாசம் சாலையை சேர்ந்தவர் முகமது அமானுல்லா (58). இவர் சிங்காரத்தோப்பில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரெமிஜான் (51). இவரது மகள் நிசாத், மருமகன் அமானுல்லா. இவர் கோவையில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவர்கள் 4 பேரும் கடந்த 4ம் தேதி சென்னையில் இருந்து மெக்காவுக்கு புறப்பட்டனர். நேற்றுமுன்தினம் மெக்காவில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நொிசலில் சிக்கி ரெமிஜானும் பலியானார். உயிர் தப்பியவர்கள் இந்த தகவலை நேற்றுமுன்தினம் மாலை திருச்சியில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி ரப்பானியா அரபி கல்லூரி தெருவை சேர்ந்தவர் முகைதீன்பிச்சை (65). இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு ரிசவுமைதீன், ஷேக்முகம்மது என்ற மகன்களும், ரசூல்பாத்திமா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. முகைதீன்பிச்சை, கூட்டுறவு துறையில் சார்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2ம் தேதி தனது மனைவி ரெஜினாவுடன் புனித பயணமாக மெக்காவுக்கு சென்றார். மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி முகைதீன்பிச்சை உயிரிழந்தார். அவரது மனைவி காயமின்றி தப்பினார். முகைதீன்பிச்சை இறந்தது குறித்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ரெஜினாவும் தனது குடும்பத்தினரிடம் செல்போனில் நேற்று தொடர்பு கொண்டு பேசினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜாரை சேர்ந்தவர் காதிர் அகமது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி சமிமுனிஷா (54). இவர்களுக்கு அப்துல்அகமது என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். சமிமுனிஷாவும், அப்துல் அகமதுவும் கடந்த 6ம் தேதி மெக்காவுக்கு சென்றிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சமிமுனிஷா இறந்தார். இதுகுறித்த தகவலை அப்துல் அகமது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பலியான 4 பேரின் உடல்களும் அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment