அதிரையில் 50 வருடங்கள் கழிந்துவிட்டதாம் மூன்று தலைமுறையினரின் காக்கா குலசை S.M. சுலைமான் அவர்களுக்கு சொந்த ஊரைவீட வந்த ஊரை நேசித்தால் ஆகாத பின்னே! அன்றைய இளைஞர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பேரர்களுக்கும் இன்னும் வரவுள்ள கொள்ளுப் பேரர்களுக்கும் என்றும் அவர் 'சுலைமாக்கா' தான்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் தான் சுலைமான் காக்கா அவர்களுக்கு சொந்த ஊர். இது நம்ம இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் தமுமுக என்ற அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் சொந்த ஊரான உடன்குடியை அடுத்துள்ள ஊர்.
[ஸ்ரீஹரிகோட்டா போன்று வின்வெளி ஆராய்ச்சி மையமும் ராக்கெட் ஏவுதளமும் அமைக்க சிறந்த இடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊர் குலசேகரன்பட்டிணம். நம்ம ஊருக்கு ரயிலு வருகிற மாதிரி இழுத்துக்கிட்டு நிக்கிற திட்டமுங்க இது. ராக்கெட் பொம்மைக்கு பூஜை போட்ட அறிவாளி பொறுப்புல இருக்கிற வரைக்கும் இது நடக்காத ஒன்னுங்க].
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அதிரை ரஹ்மானிய மதரஸாவில் ஓதுவதற்காக வந்தவர்தான் நம்ம சுலைமான் காக்கா. மூன்று ஜும்ராக்களை முடித்திருந்த நிலையில் அப்படியே ஒரு ஜம்ப் 'ஜமால் ஐஸ் கம்பெனி' வேலைக்கு, ஐமால் ஐஸ் கம்பெனியை மூடிவிட்டாலும் நம்ம சுலைமாக்கா கற்றுக்கொண்ட கைத்தொழில் இன்னும் கை கொடுக்கிறது பாருங்களேன்.
அப்படியே 1969 ஆம் ஆண்டு 40க்கு மேற்பட்ட அன்றைய மேலத்தெரு கீழ்த்தெரு இளைஞர்களை இணைத்து கீழத்தெரு பாலம் இறக்கத்தில் ஒரு நூலக கொட்டகையை அமைத்து 'இஸ்லாமிய இளைஞர் சீர்திருத்த சமுதாய நல மன்றம்' என்ற ஒன்றை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு சுமார் 20 மன்ற இளைஞர்கள் காரசாரமாக உரையாற்றிய 'அரங்கேற்ற விழா' ஒன்றை அன்றைய அதிரை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் M.M.S. ஷேக்தாவூது, மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் T.A.K. யாகூப் மரைக்காயர், ஹனீஃப் டாக்டர் போன்ற பெருந்தகைகள் முன்னிலையில் அலியார் சார் வீட்டு முன்பாக அமைந்திருந்த மைதானத்தில் நடந்ததன் விளைவாக மன்றத்தையே கீழத்தெருவிலிருந்து காலி செய்து மேலத்தெருவுக்கு மாற்றிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
மன்றம் இயங்கிய காலத்தில் மார்க்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் எழுதி வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தவர் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளார். ஒருமுறை வெளியிட்ட துண்டு பிரசுரத்தால் ஸ்பெஷல் குடும்ப கபுரு வழிபாடுகளை ஜூம்ஆ பள்ளி மையத்தாங்கரையில் செய்து கொண்டிருந்தவர்கள் முழுமையாக நிறுத்துவதற்கு காரணமாயிருந்தது.
ஒவ்வொரு ரமலானிலும் லுஹருக்குப்பின் ஜூம்ஆ பள்ளியில் தொடர் பயான், தெருமுனை பிரச்சாரங்கள் என இன்னும் தன்னளவில் ஒரு மன்றமாக செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு பெட்டிக்கடையோடு 50 வருடங்களை அதிரையில் கடந்திருந்தாலும் இன்னும் தனிமர வாழ்க்கை தான், குடும்பம் குலசையிலேயே இருக்க காரணம் அதிரையில் தலைவிரித்தாடும் பெண்ணுக்கு வீடு போன்ற சீதனக் கொடுமை என்பதாக ஒருமுறை சொல்லியிருந்தார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஷிஃபா ஆஸ்பத்திரியில் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவர் தங்கியிருந்த 10 நாட்களும் மக்கள் கூட்டம் கூட்டமாக பார்க்க சென்ற போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சொன்னது இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது அது 'என்னங்க இவருக்கு குடும்பம் இங்கே இல்லேன்னு சொன்னீங்க ஆனா ஊரே இவர பார்க்க வருது' என வியந்து கூறியது போலவே இவர் மேலத்தெருவாசிகளின் ஒவ்வொருவர் வீட்டிலும் என்றும் மானசீக குடும்ப உறுப்பினராக வாழ்ந்து வருகிறார்.
ஒரு பத்தாக்கா, இக்காமா, ஐசி, விசா என எதுவுமே வாங்காமல் 50 ஆண்டுகள் அதிரையில் ஒடிப்போச்சி இனியாச்சும் மறக்காமா வாங்கிருங்க சுலைமாக்கா...
நினைவும் சந்திப்பும்
அதிரை அமீன்
நன்றி : அதிரை அமீன்
No comments:
Post a Comment