இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்ததால் மகிந்த ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனா வெற்றி முகத்தில் இருப்பதால் உலகத்தமிழர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையை தவிர அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.
சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர்.
யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை – 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை
நேற்று மாலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நேற்று மாலை 4.30 மணிக்கு முடிந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் பணி நடந்தது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இரவு 10 மணி முதல் அறிவிக்கப்பட்டன.
மைத்ரிபாலா ஸ்ரீசேனா முன்னிலை
தபால் வாக்குகளில் ராஜபக்சே முன்னிலை பெற்றபோதிலும், மக்கள் வாக்குகளின் அடிப்படையில் 10 லட்சத்து 70ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஒட்டுமொத்தமாக சிறிசேன முன்னிலையில் உள்ளார்.
ராஜபக்சே பின்னடைவு
ராஜபக்சே 9 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதன்படி, ஸ்ரீசேன 53 சதவீத வாக்குகளையும், ராஜபக்சே 46 சதவீத வாக்குகளையும் இதுவரை பெற்றிருக்கின்றனர்.
கடும் போட்டி
பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படும் இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்ச, மைத்ரிபால ஸ்ரீசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
அதிபர் மாளிகையில் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து மைத்திரி பால ஸ்ரீசேனா முன்னிலையில் இருந்தார். இதனால் கொழும்பு நகரில் உள்ள ராஜபக்சேவின் மாளிகை முன்பு திடீரென்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அதிபர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டதாக போலீஸ் கமிஷனர் அஜித் ரோகனா தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
அதிபர் ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வழக்கத்தை விட கூடுதலாக 800 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண காவல்துறை டிஐஜி அனுரா சேனாநாயகவின் உத்தரவையடுத்து அதிபர் மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தோல்வியை ஒப்புக்கொண்டார்
இந்த நிலையில், அதிபர் ராஜபக்சே தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப்படைப்படைக்கப்படும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வெளியேறினார் ராஜபக்சே
அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்த ராஜபக்சே தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டதாக ஊடகச் செயலர் அறிவித்துள்ளார். இதன்மூலம் மூன்றாவது முறையாக அதிபராகவேண்டும் என்ற ராஜபக்சேவின் கனவு வெறும் கனவாகவே போய்விட்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
No comments:
Post a Comment