காகிதப் பொட்டலங்களில் பஜ்ஜி, போண்டா என்று பலவித பலகாரங்களையும் பேப்பரில் வைத்து நாம் சாப்பிட்டு தூக்கியெறிந்து விடுகிறோம். பிளாஸ்டிக் குப்பைகளை பற்றி பேசும் அளவுக்கு நாம், காகிதக் குப்பைகளை பற்றி பேசுவதில்லை. அப்படி நம்மால் தூக்கியெறியப்படும் குப்பைகளுக்கும் மதிப்பு உண்டு என்கிறார் காகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரத் புஜ்ரா.
காகித குப்பைகளின் தேவை மற்றும் அதன் மேலாண்மை குறித்து கடந்த 6ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “கம்ப்யூட்டர், இன்டர்நெட், டி.வி. என்று வந்துவிட்டாலும் காகிதப் பயன்பாட்டில் பெரியளவில் மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.
இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக 10 கிலோ காகிதத்தை பத்திரிகை, புத்தகங்கள், நோட்புக் என்று ஏதோவொரு வகையில் பயன்படுத்தி வருகிறார். இதுவே சீனாவில் 20 கிலோவும், அமெரிக்காவில் 100 கிலோ காகிதத்தையும் ஒருநாளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி பயன்படுத்தும் காகிதங்களை நாம் முறையாக சேமிக்கிறோமா என்றால் இல்லை.
நாம் பயன்படுத்தும் காகிதங்களில் 80 சதவிகிதம் மண்ணுக்கு சென்று விடுகிறது. மீதி 20 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சிக்கு வருகிறது. இதனால் காகித பயன்பாட்டுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால் நாம் பயன்படுத்தும் காகிதங்களையே முறையாக சேமித்து பயன்படுத்தினால் பெருமளவில் மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க முடியும்.
தற்போது ஆண்டுக்கு 40 லட்சம் டன் காகிதக் கழிவுகளை, வெளிநாடுகளிலிருந்து அதிகபட்ச விலையில் இறக்குமதி செய்கிறோம். உள்நாட்டில் குறைந்த விலையில் காகிதக் கழிவுகள் கிடைத்தாலும், அவற்றின் அளவு குறைவாகவே இருக்கிறது. அதனால் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை நம்பி இருக்கிறோம். காரணம் அங்கு காகிதங்களைப் பயன்படுத்தும் இடங்களிலே முறையாகச் சேகரித்து, தரம்பிரித்து விடுகிறார்கள். பிறகு அதை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்.
இந்தியாவில் அரசிடமும், மக்களிடமும் போதுமான விழிப்பு உணர்வு இல்லாததால் காகிதக் கழிவுகள் வீணாக மண்ணில் மட்கி புதைந்து போய் கொண்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் கொள்கை அளவில் மாற்றம் வந்து, பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இதையெல்லாம் முறைப்படுத்த முடியும்.
மக்களும் தாங்கள் தூக்கியெறியும் ஒவ்வொரு காகிதக் குப்பைக்கும் ஒரு மதிப்பும், விலையும் உண்டு என்பதை உணர வேண்டும். காகிதங்களை குப்பைதானே என்று நினைக்காதீர்கள். அதை முறையாக சேமித்து பழகுங்கள்” என்றார்.
அந்நிறுவனத்தின் இயக்குனர் உமேஷ் புஜ்ரா பேசும்போது, “இந்தியாவில் கிடைக்கும் காகிதக் கழிவுகளை அமைப்பு சாரா தொழிலாளர் கள்தான் சேகரித்து தருகிறார்கள். இதில் தெருவில் குப்பை சேகரிப்பவர்களோடு, சிறுவர்களும் ஈடுபடுகிறார்கள்.
தெருவோரங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் பழைய நியூஸ் பேப்பர், புத்தகங்கள், பேப்பர் கட்டுகளை வாங்கி சேகரித்து அனுப்புகிறார்கள். இவர் கள்தான் காகிதக் குப்பை சேகரித்து தந்து கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்றி வீடுகளில் காகிதக் கழிவுகளை சேகரிப்பதை அரசு முறைப்ப டுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் 1 கிலோ காகிதக் கழிவின் விலை சராசரியாக 10 ரூபாய் என்ற விலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எங்களைப் போன்ற நிறுவ னங்கள் அதை வாங்கி காகிதக் கூழாக்கி அரசு காகிதத்தாள் நிறுவனத்துக்கு அனுப்பி வருகிறோம்.
உலகளவில் காகித பயன்பாட்டில் 20 சதவிகிதம் மட்டுமே இந்திய காகிதக் கழிவு ஆலைகளின் மூலம் கிடைக்கிறது. இதை இன்னும் அதிகரித்தால் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். மின்சாரம், மனித உழைப்பு என பலவற்றையும் மிச்சப்படுத்தலாம்” என்றார்.
No comments:
Post a Comment