விமானங்களே நடுவானில் காணாமல் போவது அடிக்கடி நிகழ்ந்து திகில் கிளப்பிய ஆண்டு 2014. குறிப்பாக மலேசிய விமானங்கள் மூன்று விபத்தில் சிக்கின. ஒன்று இன்னமும் கிடக்காதது பெரும் சோகம். ஆனாலும் இதுவரை குறைந்த அளவு விமான விபத்துகள் நிகழ்ந்தது 2014ம் ஆண்டில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
விமானங்கள் காணாமல் போவது பீதி என்றால், விமானப் பயணிகளின் லக்கேஜ்கள் காணாமல் போவது இன்னொரு வகை அவஸ்தை. 2013ம் ஆண்டு சர்வதேச விமானப் பயணங்களின்போது 21 கோடியே 8 லட்சம் பயணப் பெட்டிகள் காணாமல் போய்விட்டன. அதாவது 1000 விமானப் பயணிகளில் ஏழு பேருடைய பயணப் பெட்டிகள் காணாமல் போயிருக்கின்றன. காணாமல்போன பெட்டிகளில் 99 சதவீதத்திற்கு அதிகமான பெட்டிகள் ஐந்து நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் விமானத்தில் காணாமல் போகும் பயணப் பெட்டிகள் ஒவ்வொரு விதமாக கையாளப்படுகின்றன. பல விமான நிலையங்களில் அவற்றை அழித்து விடுகின்றனர். கனடா நாட்டில் 90 நாட்களுக்குள் பெட்டிகள் உரிமை கோரி திரும்பப் பெறப்படாவிட்டால் பெட்டிகளில் உள்ள பொருட்கள் தொண்டு நிறுவனங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டு விடுகின்றன.
அமெரிக்காவில் யாராலும் கோரப்படாத பயணப் பெட்டிகள் அலபாமாவில் ஸ்காட்ஸ் போராவில் உள்ள உரிமை கோரப்படாத பயணிகள் பெட்டிகள் மையத்தில் ஒப்படைக்கப்பட்டு விடுகின்றன. அங்கு ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேற்கண்ட மையம் விமானத்தில் காணாமல் போகும் பெட்டிகளின் தலைநகரமாகத் திகழ்கிறது. இங்கு உள்ள பெட்டிகளில் பாலாடைக் கட்டி, உயிருள்ள விஷப் பாம்புகள், கவச உடை ஆகியவையும் காணப்பட்டது சுவாரஸ்யமான செய்தி.
விலை உயர்ந்த அஞ்சல் தலைகள்
டெயில்
உலகின் முதல் அஞ்சல் தலையை 1840ம் ஆண்டு மே 1ம் நாள் பிரிட்டன் வெளியிட்டது. இங்கு அஞ்சல் தலை முறையை ரோலண்ட் ஹில் என்பவர் அறிமுகப்படுத்தினார். ஒரு பென்னி மதிப்புள்ள இந்த அஞ்சல் தலையில் ராணி விக்டோரியாவின் உருவம் இடம் பெற்றிருந்தது. இது ‘பென்னி பிளேக்’ என அழைக்கப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்போரிடையே இந்த அஞ்சல் தலை இப்போது ரூ.4 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
1856ம் ஆண்டு பிரிட்டிஷ் கயானாவில் ஒரு சென்ட் மதிப்புள்ள அஞ்சல் தலை மெஜந்தா நிறக் காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் தலை கடந்த ஜூன் 2014ல் 94,80,000 அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.58 கோடி) விற்கப்பட்டது. ஸ்வீடன் வெளியிட்ட மஞ்சள் நிற Tres killing என்ற அஞ்சல் தலை 2010ம் ஆண்டு 2.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ. 14 கோடி) விற்கப்பட்டது.
பாஸல் மாகாணம் (தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ளது) 1845 ஜூலை 1ல் பாஸல் டவ் என்ற மூன்று வண்ண அஞ்சல் தலையை வெளியிட்டது. இது 1854 வரை பயன்பாட்டில் இருந்தது. உலகின் முதல் மூன்று வண்ண அஞ்சல் தலை இதுதான். இதன் தற்போதைய மதிப்பு ரூ. 11 லட்சம்.
அமெரிக்க அஞ்சல் துறை 1918ல் அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது. அதில் ஒரு விமானம் பறப்பது போன்ற வடிவமைப்பு இடம் பெற்றது. இந்த அஞ்சல் தலைகளில் விமானம் தலைகீழாக அச்சிடப்பட்டிருந்தது. இதை தபால் தலை சேகரிப்போர் இன்வெர்ட்டட் (Inverted) என்பர். இந்த தபால் தலைகளில் ஒன்று, கடந்த 2007ம் ஆண்டில் 9,77,500 டாலருக்கு (சுமார் ரூ.6 கோடி) விற்கப்பட்டது.
க.ரவீந்திரன், ஈரோடு.
No comments:
Post a Comment