சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் புகை பிடித்தால் விதிக்கப்படும் அபராத தொகை ரூ.1,000 உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசின் புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
வல்லுநர் குழு சிபாரிசு
புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை காலமாற்றத்துக்கு ஏற்ப ஆய்வு செய்வதற்காக, வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் அளித்தது.
அதில், புகை பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, சிகரெட்டுகளை சில்லறையாக விற்காமல், பாக்கெட்டாக மட்டுமே விற்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
மத்திய அரசு ஏற்பு
ஆனால், இந்த யோசனைக்கு புகையிலை விவசாயிகளும், சிகரெட் உற்பத்தியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சில்லறையாக விற்க தடை விதிக்கும் யோசனையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
ஆனால், சமீபத்தில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லி மேல்–சபையில் பேசிய மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, வல்லுநர் குழுவின் சிபாரிசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், மந்திரிசபைக்கான வரைவு குறிப்பு, அமைச்சகங்களுக்கிடையிலான ஆலோசனைக்காக சுற்றுக்கு விடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
சில்லறை விற்பனைக்கு தடை
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், மேற்கண்ட சிபாரிசுகளுடன், புகை விதிக்க தடை விதிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரைவு மசோதா தயாரித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக, நேற்று அம்மசோதா வெளியிடப்பட்டது.
அதில், இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்கு தடை விதிக்கப்படும். பொது இடங்களில் புகை பிடித்தால் விதிக்கப்படும் அபராத தொகை, ரூ.200–ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில், புகை பிடிப்பதற்கென உள்ள பிரத்யேக இடங்களை ரத்து செய்வதற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. சர்வதேச விமான நிலையங்களில், புகை பிடிக்கும் பகுதி நீடிக்கலாம்.
விளம்பரத்துக்கு தடை
கடைகளில், பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது, 18–ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மேற்கண்ட பொருட்களை விற்கக்கூடாது.
18 வயதுக்கு உட்பட்டவர்களை, புகையிலை பொருட்களை பயிரிடுதல், பதப்படுத்துதல், விற்பனை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
செல்போன், இன்டர்நெட் உள்பட எந்த வழிமுறையிலும் புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
சிறப்பு கோர்ட்டுகள்
புகையிலை பொருட்களை மென்று விட்டு, பொது இடங்களில் துப்புவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காசநோய், நிமோனியா, பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு இதுவே முக்கிய காரணம்.
இந்த புதிய சட்டத்தை மீறுவோருக்கான அதிகபட்ச அபராத தொகை, ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சட்ட மீறல் குற்றங்களை விசாரிப்பதற்காக, சிறப்பு செசன்சு கோர்ட்டுகள் அமைக்கப்படும்.
இந்த சட்ட விதிகளின் அமலாக்கத்தை கண்காணிக்க, தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment