Latest News

கத்தி இன்றி! இரத்தமின்றி!! அதிரையில் 50 ஆண்டுகாலம் சேவை செய்த பெண்மணி!!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


அதிரையின் சாமானிய மக்களை பற்றி அவ்வப்போது பார்த்து வருகிறோம், அந்த வரிசையில் இன்று ஒரு பெண்மணியை பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறோம் இன்ஷா அல்லாஹ்.

இன்றைய தலைமுறையிடம் சில பல ஆண்டுகளுக்கு முன்புவரை பிரசவங்கள் வீட்டில் தான் நடந்ததாக சொல்லிப்பாருங்கள் அவர்கள் உங்களை ஓரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் பார்ப்பார்கள். இன்றைய தலைமுறையினர் கனவிலும் நம்ப முடியாத அளவுக்கு அனுபவ கை வைத்தியம் அற்றுப்போய் விட்டது.

இன்றைய உலகம் கல்வியில், விஞ்ஞான மருத்துவ நிபுணத்துவத்தில், பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக பீற்றிக் கொள்ளக்கூடியதொரு காலகட்டம் ஆனால் நமது முன்னோர்களின் அனுபவத்தின் முன் ஒப்பிட்டால் முழுமையாக தோற்றுப்போன பொருளாதார சித்தாந்த உலகில் வாழ்கிறோம் என உறுதியாக சொல்ல முடியும், எப்படி?

உதாரணமாக சொல்வதாக இருந்தால், அதிரைவாசிகளான நாம் நமது வசதிவாய்ப்புகளுக்கு ஏற்ப உள்ளூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என பிரசவ மருத்துவர்களை தேடி ஒடுகிறோம். இன்னும் சற்று வசதி கூடுதலாக உள்ளவர்கள் திருச்சி, சென்னை என செல்வதும் உண்டு ஆனால் எங்கு சென்றாலும் நமது முன்னோர்களான அனுபவ கை வைத்தியர்களிடம் பெற்ற பலனை பெறுகின்றோமா என்றால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை என அடித்து சொல்லலாம்.

ஏழ்மை நிலையில், சரியான சாப்பாடு, ஊட்டச்சத்து என எதுவுமற்ற நிலையில் வீட்டிலிருந்தவாறே குறைந்தது 5 முதல் 10 குழந்தைகள் வரை மிகச்சாதாரணமாக பெற்றுவிட்டு 40 நாள் ஓய்வுக்குப்பின் மீண்டும் உடல் உழைப்புக்கு திரும்பியவர்கள் நமது தாய்மார்கள் ஆனால் இன்று எல்லாவிதத்திலும் முன்னேறியுள்ளதாக மார்தட்டி கொள்ளும் உலகின் தற்கால பெண்மக்களால் இன்று எத்தனை குழந்தைகளை இயல்பாக பெற்றுக் கொள்ள முடிகிறது அல்லது எத்தனை மருத்துவர்கள் தாய்மார்களை கீறிக்கிழிக்காமல் பிரசவம் பார்க்கிறார்கள் என சொல்லுங்கள்?

விஞ்ஞானமும் மருத்துவமும் தாறுமாறாக வளர்ந்த இக்காலத்தில் தர்க்கரீதியாக, மருத்துவரீதியாக 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள் 'நாங்கள் இருக்கிறோம்'(இதெல்லாம் வெறும் விளம்பர டயலாக் மட்டும் தான்) என நெஞ்சில் கை வைத்து சொல்ல வேண்டிய மருத்துவர்கள் இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளாதீர் என ஏன் பல்வேறு பூச்சாண்டி காரணங்களை கூறி பயமுறுத்துகிறார்கள்?

நமது தந்தையர்களும் ஒரு காலத்தில் பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா என வெளிநாட்டு சபுறாளிகளாக இருக்கும் நிலையில் தான் நமது தாய்மார்கள் நம்மை சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்தனர் ஆனால் இன்று கர்ப்பிணிகளிடம் கணவர் எங்கே உள்ளார் என கேட்டு சிகிச்சை அளிப்பதேன்? வழுக்கட்டாயமாக அறுவை சிகிச்சை மூலம் பிள்ளைகளை பிறக்க வைத்து விட்டு இரண்டுக்கு மேல் பெற்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என மிரட்டுவது தான் இவர்கள் பெற்ற கல்வியின் தரமா?

ஆக, மனிதம் குழிதோண்டி புதைக்கப்பட்டு பணம் கோலோச்சும் இக்காலத்தில், வெறும் கைகளால் சுமார் 50 வருடம் அனுபவ மருத்துவ சேவையாற்றிய 'ஆமினா அம்மாள்' அவர்களை இன்றைய தலைமுறை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் நன்நோக்கில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

இன்று சுமார் 80 வயது மதிக்கத்தக்க, வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த 'ஆமினா அம்மாள்' அவர்கள் தனது திருமணத்திற்கு பின் மேலத்தெருவில் நிரந்தரமாக கணவருடைய வீட்டில் குடியேறி இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள் (கவனிக்க: கணவர் பொண்டாட்டி வீட்டுக்குப் போகவில்லை).

அவரது மாமியார் இபுறாஹிம்மா மற்றும் மாமியாரின் தாயார் ரெங்கத்தம்மா (இப்பெயரின் உச்சரிப்பு எமக்கு சரியாக வரவில்லை) அவர்களின் மூலம் தங்களின் மருத்துவ சமூக பாரம்பரிய சேவையான பிரசவம் பார்த்தலை கற்றுக் கொண்ட ஆமினம்மா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் மேலத்தெரு சுற்றுவட்டார பெண்கள் அனைவருக்கும் பிரசவம் பார்த்துள்ளனர். இவர்களின் கையால் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுகமாய் பிறந்துள்ளனவாம் (நாங்கள் உட்பட), ஒரே நாளில் 3, 4 தாய்மார்களுக்கு கூட பிரசவம் பார்த்துள்ளார்களாம்.

கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வெடுத்துவரும் நிலையில், ஒரு காலத்தில் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் கூப்பிடு ஆமினம்மாவை என்று அவர்களின் வாழ்க்கை பரபரப்பான ஒன்றாக இருந்துள்ளது மேலும் கர்ப்பிணிகளின் வயிற்றை தடவிப் பார்த்தே குழந்தை வயிற்றினுள் இருக்கும் கோணம், குழந்தையின் தலைக்கு மேல் நஞ்சுக்கொடி இருத்தல், கொடி சுற்றுதல், தண்ணீர் குடம் உடைதல், பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறக்கும் தோராயமான நேரம் என அனைத்தையும் சொல்லிவிடுவார்களாம்.

வழக்கொழிந்து போய்விட்ட செந்தூரம், காசுக்கட்டி, ராஸ்னா, ஜன்னிக்கல் உரைத்தல் போன்ற கை மருத்துவ முறைகளை பற்றி கேள்விப்படுவோருக்கு இன்று மிக அதிசயமாகவே தெரியும். மேலும் வயிற்றுவலி, தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், கைக்குழந்தைகளுக்கு உறம் விழுதல் போன்றவைகளுக்கும் கை மருத்துவம் பார்ப்பவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

ஆமினம்மா அவர்களுக்கு 3 ஆண் மற்றும் 1 பெண் என நால்வர் வாரிசுகள் என்றாலும் யாரும் அவர்களுடைய சேவையை கற்றுக் கொள்ளவும் இல்லை, தொடரவுமில்லை. இந்த சேவை அவர்களுடன் முற்றுப்பெருவது நமது சமூகத்தின் நஷ்டமே.

ஆமினம்மா அவர்களுடைய மருத்துவ சேவையினால் பிரசவிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் அந்த தாயின் உடல் நலத்தின் மீதும், அவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் இறைவனிடம் துஆ செய்யவும், நம்மால் இயன்றவகையில் நாமே மனமுவந்து உதவவும் கடமைபட்டுள்ளோம்.

குறிப்பு: 
இந்த கட்டூரையை இன்றைய மருத்துவர்களுடன் ஒப்பீட்டு எழுத தூண்டிய ஒரு சில காரணிகள் வருமாறு:

1. ஒருமுறை ஒரு இளம் கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மார்க்கம் தெரியாத அந்த முஸ்லீம் பெண் மருத்துவர் 'ஏண்டி உனக்கு இந்த வயசுல தேவையா...... என சொற்களால் சுட, ஹலாலான திருமணத்தின் மூலம் கர்ப்பமான அந்த இளம்பெண் கூனிக்குறுகி நின்றார்.

2. ஒருமுறை இன்னொரு பெண் பிரசவத்திற்காக சென்ற போது இது ஆபரேசன் கேஸ் என பயமுறுத்த, பெற்றோர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை வேறு மருத்துவமனையில் சேர்க்க அங்கே சுகப்பிரசவமானது.

3. இன்னொரு முறை, இன்னொரு கர்ப்பிணியை அங்கிருந்த டாக்டர் இது சிக்கலான கேஸ் கட்டாயம் கத்தி வைக்க வேண்டும் என மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் ஏதோவொரு அவசர வேலையாக அந்த மருத்துவர் வெளியே சென்று விட்டு திரும்புவதற்குள் அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி இருந்தது.

என்பன போன்ற பல நூறு காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் ஆமினம்மா அவர்களின் சேவையை பற்றி சொல்ல வந்த இடத்தில் எளிய நடைமுறை இஸ்லாமிய சிந்தனைகளை படிக்கத் தவறி, படிக்கும் காலத்தில் இஸங்களின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பணப்பேய்களை பற்றி தற்போதைக்கு அதிகம் பேச வேண்டாம் என நினைக்கின்றோம்.

வேண்டுதல்: 
அதிரை சீனியர் சகோதரர்களே! நாம் இங்கே குறிப்பிடும் அனுபவ மருத்துவர் 'ஆமினம்மா' அவர்களை போல் உங்களுடைய வாழ்வில் பலரை சந்தித்திருப்பீர்கள், அதிரையின் ஒவ்வொரு தெருவிலும் பல ஆமினம்மாக்கள் வாழ்ந்திருப்பார்கள், அவர்களை பற்றி நினைவுகூர்ந்து தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

எண்ணமும் எழுத்தும் 
ஆமினம்மா அவர்களின் மகளார் உதவியுடன்
நன்றி : S. அப்துல் காதர் & அதிரை அமீன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.