இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
வருடந்தோறும் இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது. அந்த வகையில் 23-01-2015 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பெண்கள் உட்பட அதில் கலந்து கொண்ட 360 பேரில் 317 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சோழபுரம் ஹாஜா அவர்கள் இந்த முகாம் பற்றி குறிப்பிட்ட போது, ‘அவசர தேவைக்காக எந்நேரமும் ரியாதில் இரத்ததானம் செய்து வருகின்றோம் அதுபோல் ரமலான் மற்றும் ஹஜ் காலங்களில் உலகெங்கிலுமிருந்து சவுதி அரேபியாவுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களில் தேவையுடையோருக்கு வழங்குவதற்காக பிரம்மாண்டமான முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றோம்.
இது தவிர இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம் போன்ற நாட்களிலும் இங்கே உயிர்காக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம். இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 33வது முகாமாகும்’ என்றார்.
கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் இரத்த வங்கி கண்காணிப்பாளர் டாக்டர் ரிஹாம் அஸ்ஸ_வையாவும் இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் சிடாண்டோவும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து ஒத்துழைத்ததுடன் மக்களுக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமினை ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல மாநிலத்தவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் குருதிக் கொடையளித்தனர்.
அதுபோன்று இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், சிரியா, இத்தியோப்பியா மற்றும் சவுதி நாட்டினரும் இந்த இந்திய குடியரசு தின இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
நகரின் பல பகுதியிலிருந்தும் கொடையாளிகளை தங்களது வாகனங்களில் அழைத்து வந்தவர்களுக்கும் அதற்கான வாகன ஏற்பாடுகளை செய்த தொண்டரணி பொறுப்பாளர் ஷாகிர் அவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கம்பெனிகளில் உயர் பதவியிலிருப்பவர்கள், அடிமட்ட தொழிலாளி என்ற எந்தவித பாகுபாடுமின்றி பணியாற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டரணியினருக்கும் இரத்ததானம் செய்த கொடையாளிகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் நூருல் அமீன், ஜமாஅத் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.
அதிகமானோர் இரத்ததானம் வழங்கியதில் சவுதி அரேபியாவிலேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது பாராட்டத்தக்கது.
No comments:
Post a Comment