தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியது:
இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஜனவரி 25-ஆம் தேதியை, தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்று 2011-ஆம் ஆண்டிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நிகழாண்டு ஜனவரி 25-ஆம் தேதி ஐந்தாவது தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டின் மையநோக்கு, “சுலபமான பதிவு-சுலபமான திருத்தம்’ என்பதாகும்.
தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில அளவிலான விழா ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள், மூன்று தேர்தல் அதிகாரிகள், ஒரு வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோருக்கு விருதுகளை ஆளுநர் வழங்குகிறார்.
மேலும், புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையையும் வழங்குகிறார் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment