மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக ஒதுக்கும் நிதியை முழுமையாக செலவிடவேண்டுமென தமுமுக வலியுறுத்தியுள்ளது.
தமுமுக காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அம்பகரத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கிளை தலைவர் செய்யது முபாரக் தலைமை வகித்தார். பொதுக்கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்கள் 7 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ளதால், சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு வழங்கியுள்ள 2 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை முழுமையாக செலவு செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது. எனவே, புதுவை இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுவை வக்பு வாரியத்தை தனியாக பிரிக்கவும், வக்பு சொத்துகளை பாதுக்காக்க முத்தவல்லிகள், ஜமாத்தார்கள் மற்றும் த.மு.மு.க உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கொண்ட ஒரு குழுவை புதுவை மாநிலம் முழுவதும் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு வெளியிடும் காலண்டரில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வருட கணக்கு நாள் மட்டுமே குறிப்பிட்டு வெளியிடப்பட்டு வருகிறது, புதுச்சேரி மாநிலத்தில் அதிகளவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் கடைபிடிக்கும் இஸ்லாமிய நாட்காட்டி கணக்கும் வருமாண்டு முதல் குறிக்கப்படவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தின் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். பூரண மது விலக்கை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும். முன்னதாக கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் குர்ஆன் விளக்கவுரையாற்றினர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் அலாவுதீன், நைனா முஹம்மது, மாநில செயலாளர் கோவை செய்யது, தலைமை கழக பேச்சாளர் கோவை முஜிபுர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், முன்னதாக கிளை செயலாளர் முஹம்மது அன்ஹாருதீன் வரவேற்றார், அம்பகரத்தூர் கிளை பொருளாளர் முஹம்மது பாசில் நன்றி கூறினர்.
No comments:
Post a Comment