ஆடிட்டர் குருமூர்த்தி விடுத்துள்ள சவாலை ஏற்க தயார் என்றும், என் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் அரசியலை விட்டே விலகுவேன்" என்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது கூறப்பட்டுள்ள தொலைபேசி இணைப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கமும், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் உரிய பதிலும் அளித்துள்ளேன். இதற்கு பின்னரும் கூட ஆடிட்டர் குருமூர்த்தி, "என் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூறினாரே தயாநிதிமாறன் ஏன் இன்னும் தொடரவில்லை; இந்த விவகாரம் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா?" என்று முனை முறிந்த கேள்வி அம்புகளை என் மீது தொடுத்துள்ளார். இவ்வாறான கேள்விகளை கேட்டு தனது அரைவேக்காட்டுத் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.
எப்.ஐ.ஆர். போடப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்து விட்டு வரும் வரையில் மான நஷ்ட வழக்கு தொடருவது பயன் தராது என்பது சராசரி அறிவு படைத்தவருக்கும் தெரியும். அதி மேதாவி ஆடிட்டர் குருமூர்த்திக்கு மட்டும் அது புரியாமல் போனது ஏனோ? அடுத்து இது குறித்து நேரடி விவாதத்துக்கு வர தயாரா? என்று கேட்டிருக்கிறார். குருமூர்த்தியின் அறை கூவலை நான் ஏற்க தயார்?. ஆனால் அதற்கு முன் அவர் எனது இரண்டு கேள்விகளுக்கு சரியான விளக்கம் தரவேண்டும்.
முதலாவதாக ஒரு ஐ.எஸ்.டி.என். பி.ஆர்.ஐ. இணைப்பின் மூலம் ஒரே சமயத்தில் அவர் குறிப்பிடுவது போல முன்னூறு தொலைபேசி எண்களை இயக்கி காட்டுவாரா?. அந்த முன்னூறு எண்களையும் ஒரே நேரத்தில் இயக்க சாத்தியக்கூறு இருப்பதாக அவர் நிரூபித்துக் காட்டி விட்டால், நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன்.
இரண்டாவதாக, அவர் குறிப்பிடுவது போல 400 கோடி ரூபாய்க்கு மேல் தொலைபேசி உபயோகித்திருந்தால், டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் உள்ள, அதற்கான மீட்டர் ஓடியிருக்கும் அல்லவா? அந்த "மீட்டர் ரீடிங்கை" அவர் காட்டட்டும். இந்த இரண்டையும் அவர் நிரூபித்துவிட்டு, தேதி மற்றும் இடத்தை அவர் குறிப்பிடட்டும். அவரது சவாலையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று அந்த அறிக்கையில் மாறன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment