இந்தத் தேர்தலில் என்னைத் தோற்கடித்தது தமிழர்களின் வாக்குகளே. ஆனால் என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை, என்று ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து அம்பாந்தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவர் ஊரை சேர்ந்தவர்கள், ராஜபக்சேவை பார்த்ததும் கதறி அழுதனர். இதனால் ராஜபக்சேயும் கண்ணீர் விட்டார். பிறகு அவர் தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசுகையில், "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு வாக்களிக்க வில்லை. இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டுப் போடாததால் நான் தோல்வி அடைய நேரிட்டது. தமிழர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன். தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த இந்த தோல்வியை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நான் ஒரு தோல்வியாகவும் கருதவில்லை. நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும் சிங்களர்களிடம் உள்ள ஆட்சி அதிகாரம் போய்விடவில்லை. எனவே என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை," என்றார். இதற்கிடையே, ராஜபக்சே தலைவராக உள்ள சுதந்திரா கட்சியில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, மீண்டும் அந்தப் பதவிக்கு வர முன்னாள் அதிபர் சந்திரிகா முயற்சித்து வருகிறார். அவருக்கு கட்சியில் கணிசமான ஆதரவும் உள்ளது.
No comments:
Post a Comment