வரும் ஜனவரி 26 ஆம் தேதி வழக்கம் போல இந்தியா தனது 65 ஆவது குடியரசு நாளைக் கொண்டாட இருக்கிறது. இந்த வருடக் கொண்டாட்டத்தின் சிறப்பு என்ன வென்றால் இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினரே இந்த வருடக் கொண்டாட்டத்தின் சிறப்பு ஆகும். ஆமாம்! அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் இந்த வருடம் குடியரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க சிறப்பு விருந்தினராக வர இருக்கிறார்.
குடியசு தினவிழாவின் உண்மையான நிரந்தரமான சிறப்பு என்ன என்று நாம் சிந்தித்தால் இந்தியாவில் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல புரட்சிகளையும் போராட்டங்களையும் , அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய உடல் பொருள் ஆவி ஆகியவற்றை இன மத சாதி பேதமின்றி நாட்டுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவு கூறி நன்றி செலுத்தும் நாள் , ‘குடியரசு தினம்’ ஆகும்.
அதே நேரம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைத்துப் பார்ப்பவர்களால் ஒரு விஷயத்தை ஜீரணிக்க இயலவில்லை என்பதையும் இங்கே கூறித்தான் ஆகவேண்டும்.
அண்மைக்காலமாக, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு துணை நின்றவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுப் பின்னர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளிவந்தவர்கள் அதாவது இந்திய சுதந்திரத்துக்கு எதிராக இருந்தவர்கள் தேசத்தந்தைக்கு எதிராக துப்பாக்கி எடுத்தவர்களெல்லாம் அரசியல் காரணங்களுக்காக முன்னிலைப் படுத்தப்படுவதும் உண்மையான தியாகிகள் உடைய வரலாறு திட்டமிட்டு மறைக்கப்படுவதும் இப்போது கண்கூடாக காணப்படுகிறது.
சில வரலாற்றுச் செய்திகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற ஓராண்டுக்கு முன்பே அதாவது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது.
ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த அரசியல் சட்டம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமான அடிப்படை உரிமைகளை வழங்கி இருக்கிறது. இந்த சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் சொத்துரிமை – வாக்குரிமை- நாடெங்கும் தடை இல்லாமல் சென்றுவரும் உரிமை- பேச்சுரிமை- எழுத்துரிமை- தாங்கள் விரும்பும் மதங்களைப் பின்பற்றும் உரிமை- கல்வி கற்கும் உரிமை ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு இந்த அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது. இந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் அரசுகள் அமைகின்றன; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் பெயரால்தான் நாட்டை ஆள்வதற்கு பதவி ஏற்போர் பதவிப் பிரமாணம் ஏற்கிறார்கள். சுருக்கமாக சொல்லபோனால் நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் அச்சாணி இந்த அரசியல் அமைப்பு சட்டம்தான். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த நாள்தான் குடியரசு நாள்.
கடந்த 2014 ஆம் ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலாமாகக் கொண்டாடப்பட்டது. இந்த வருடமும் இதோ அமெரிக்க அதிபருடன் கொண்டாடப்படப் போகிறது. ஆனால் கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் இடையில் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
முதலாவதாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. நாட்டை இத்தனை ஆண்டுகாலங்களாக ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து தேர்தல் மூலமாக வாக்களித்து, மக்கள் ஆட்சியைப் பிடுங்கி பாரதீய ஜனதா கட்சியிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
மக்கள் விரும்பியதேன்னவோ மாற்றம் வேண்டுமென்பதுதான். வளர்ச்சியடையாத பொருளாதாரம் வளரும்; விலைவாசிகள் குறையும்; இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தீர்க்கப்படும்; சமுதாய மக்களிடையே உறவுகள் மேம்படுத்தப்படும்; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அனைவருக்கும் ஏற்றமான இனிமையான வாழ்வு கிடைக்குமென்றுதான் ஜனநாயக முறையில் மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தார்கள்.
ஆனால் கடந்த ஏழுமாதங்களாக நடைபெற்று வரும் புதிய ஆட்சியில் முந்தைய ஆட்சியில் அரைத்த மாவுதான் மீண்டும் அரைக்கப்படுகிறதே தவிர புதிதாக வளர்ச்சியின் அடையாளம் ஒன்றுமே தென்படவில்லை.
வளர்ச்சிக்கு மாறாக , அரசியல் சட்ட விதிகளின் பெயரால் உறுதி மொழி எடுத்துப் பதவிக்கு வந்தவர்கள் மக்களைப் பிரித்து பேதங்களை வளர்க்கும் செயல்களை முன்னெடுத்தும் முன்னுரிமை கொடுத்தும் வருகிறார்கள். எந்த அமைப்புகள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு எதிரான் நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ- நாட்டின் சுதந்திரத் திருநாளின்போது சுதந்திரத்துக்காக தோளோடு தோள் நின்று போராடிய சிறுபான்மையினரையும் – தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் அடக்கி ஒடுக்கும் அளவுக்கு அந்த அமைப்புக்கள் கொடுக்கும் சாவிக்கு ஆட்டம் போடும் பொம்மையாக இன்றைய புதிய ஆட்சி இருந்து வருகிறது.
ஆட்சிக்கு வந்த அடுத்த வாரமே, நாட்டின் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தை வழக்கிலும் நடைமுறையிலும் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடப் படவேண்டுமென்று அரசு அறிவித்து தனது உயர்சாதியை பேணும் தன்மைக்கு சுழி போட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணலானது.
அடுத்து, மத்திய அரசின் அனைத்து துறைகளும் இந்தி மொழியைத்தான் தங்களுக்குள் பரிமாற்ற பாஷையாகப் பயன்படுத்தவேண்டுமென்று உத்தரவிட்டது.
எந்த அன்னிய முதலீட்டை காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியதோ அதே அந்நிய முதலீட்டைக் கொண்டுவர அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
விலைவாசியைக் குறைப்போம் என்று முழங்கி ஆட்சியை பிடித்த அரசு வந்த உடன் செய்த முதல் வேலை வரலாறு காணாத வகையில் இரயில் மற்றும் சரக்குக் கட்டணங்களை உயர்த்தி மக்களின் தலைகளில் இடிகளை இறக்கியது.
அரசு தரும் மான்யத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் அதற்காக ஆதார் கார்டு திட்டத்தையும் மன்மோகன் சிங் அரசு கொண்டு வரும்போது எதிர்த்து பேயாட்டம் ஆடிவிட்டு அதே திட்டங்களை இன்னும் தீவிரமாக அமுல்படுத்தத் தொடங்கியது.
பெட்ரோல் முதலிய எரிபொருள் விலைகளை சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்றபடி நிர்ணயம் செய்துகொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு முந்தைய அரசால் வழங்கப்பட்டதை தொடர்ந்து எதிர்த்து வந்த பாரதீய ஜனதாக் கட்சி தான் பதவி ஏற்ற பிறகும் கூட அதே முறைகளைத்தான் தொடர்ந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் உலகெங்கும் எதிர்பாராத நிலையாக கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து அதன் காரணமாக இந்திய அரசுக்கு 3.10 இலட்சம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்தாலும் கண்துடைப்பாக மட்டுமே பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. இதில் இன்னொரு அதிசயமாக உற்பத்தி வரி என்று புதிய வரியும் அறிமுகபடுத்தப்பட்டு நியாயமாக பயனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய விலைவீழ்ச்சியின் பயன் அரசின் கஜானாவுக்குப் போகிறது.
நூறு நாள் வேலைத்திட்டம் என்பது ஏழை எளிய மக்களுக்கான பசி போக்கும் வேலைவாய்ப்புத் திட்டம். இந்தத் திட்டத்துக்கு புதிய அரசு ஏழே மாதங்களில் மூடுவிழா நடத்திவிட்டது.
விவசாயிகளுக்கான யூரியா உர மானியத்தை புதிய அரசு இரத்து செய்துவிட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஆறுகளில் நீர்! ஆனால் விவசாயிகளின் கண்களிலோ கண்ணீர்! காரணம் விவசாயப்பணிகளை மேற்கொள்ள உரம் கிடைக்கவில்லை. அரசோ சமஸ்கிருதத்தில் சங்கீதம் பாடிக் கொண்டிருந்தது.
பண்டித ஜவர்ஹர்லால் உடைய காலத்தில் இருந்து இந்த நாட்டின் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளக் காரணமாக இருந்த திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. பக்ரா நங்கல் அணைத்திட்டம் போன்ற மாபெரும் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரங்களை ஒதுக்கித் தந்த திட்டக் கமிஷன் ஒரே இரவில் தூக்கி எறியப்பட்டு பிரதமர் மோடி அதன் தலைவராக பொறுப்பேற்று அதிகாரக் குவிப்பு மையமாக ஆக்கிக் கொண்டதுடன் தங்களது கட்சிக்காரர்களை தன்னுடன் சாய்ந்து அமர்ந்து கொள்வதற்கு திண்டுத் தலையணை கொடுத்து வைத்துக் கொண்டு திட்டக் கமிஷனை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது இந்த அரசு.
இப்படிப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் ஒரு புறமிருக்க , ஆட்சியில் இருக்கும் கட்சியை ஆட்டிவைக்கும் அமைப்புகளும் ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் அமைச்சர்களும் , ஆட்சியின் அங்கமாக இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களும் அள்ளிவிட்ட அவதூறுகளும், பேதம் வளர்க்கும் பிரிவினைப் பேச்சுக்களும் , மத சார்பான தூண்டுதல்களும் அடை மழை போல பொழியத் தொடங்கின.
முதலாவதாக மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் பகவத் கீதை என்கிற ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஒரு குறிப்பிட்ட தனிப்பிரிவின் புனித நூலை தேசிய நூலாக ஆக்கவேண்டுமென்று குறிப்பிட்டார். இது மதசார்பின்மைக் கோட்பாட்டின் மீதான ஒரு வெளிப்படையான போர்ப்பிரகடனம் என்றுதான் நாட்டின் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
அடுத்து, நிரஞ்சன் ஜோதி என்கிற ஒரு அமைச்சர் இந்த நாட்டில் அனைத்து மக்களும் இராமனுக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்கவேண்டுமென்றும் அவ்விதம் ஏற்காதவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று தலைநகரில் பேசினார். நாடே கொந்தளித்த பின் பிரதமர் பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். அமைச்சர் மன்னிப்புக் கோரினார். உதடுகள் பேசிய வார்த்தைகள்தான் இந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டனவே தவிர அவர்களின் உள்ளங்கள் மன்னிப்புக் கோரவில்லை.
அதற்கும் அடுத்து இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று சொல்லி ஒரு மதச் சாமியார் ஒவ்வொரு இந்துத் தாயும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று தனது ஆசையைத் தெரியப்படுத்தினார். இன்னொருவரோ அதுவும் போதாது பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்று பதட்டப்பட்டார். குழந்தைகள் ஏதோ வங்கிக் கணக்கில் வைத்துள்ள பணத்தை செக் எழுதிக் கொடுத்துவிட்டு எடுப்பது போன்றதா என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை. ஆனால் இத்தகைய வரம்பு மீறிய உளறல்களுக்கெல்லாம் பொறுப்பான பிரதமர் பதிலே அளிக்காமல் வாய் மூடி இருக்கிறார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதரமான மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசால் பிடித்துவைக்கப்பட்டன. அந்தப் படகுகளை நான்தான் பிடித்துவைக்கச் சொன்னேன் என்று தமிழ்நாட்டில் உலவிக் கொண்டு இருக்கும் ஒரு பிஜேபி யின் தலைவர் வெளிப்படையாக தைரியமாகப் பேசினார். தங்களது வாழ்வாதரங்களை இழந்து கையறு நிலையில் நின்ற மீனவர்களுக்கு ஆறுதலாக பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ பேச வேண்டுமென்ற ஒரு அடிப்படை நாகரிகம் கூட இந்த நாட்டை ஆளவந்தவர்களின் மனதில் படவில்லை.
குடியரசு தினத்தில் மிகவும் வேதனையாக நாம் குறிப்பிடவேண்டியது புதிய ஆட்சியின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு ஆளும்கட்சியின் உறுப்பினர் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயை ஒரு தேசபக்தர் என்று அறிவித்தாரே அதை இந்த அரசு வேடிக்கை பார்த்ததே – அந்தப் பேச்சுக்கு அங்கீகாரம் அளித்ததே அப்படிப்பட்ட அரசின் பிரதி நிதிகளுக்கு காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் அதன் பின்னால் ஏற்பட்ட குடியரசையும் அதற்கான நாளையும் கொடியேற்றிக் கொண்டாட அருகதை இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் நாம் கேட்கவிரும்புகிறோம். அடுத்த குடியரசு தினத்துக்குள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேக்கு எத்தனை இடங்களில் சிலைகள் வைக்கப்படுமென்று அறிவித்துவிட்டு இந்தக் குடியரசு நாளைக் கொண்டாடும் துணிச்சல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா என்பதை கண்ணியத்துடன் சொல்லவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
மொத்தத்தில் கடந்த குடியரசு தினக் கொண்டாட்டத்துக்கும் இந்த ஆண்டின் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்கும் இடையில் இப்படியெல்லாம் பல இழிவான நிகழ்வுகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. வளர்ச்சி என்பதை முன்னெடுத்து வாக்குகளை வாங்கிக் குவித்து வென்ற பிறகு வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் நிகழ்ச்சிகளும் பேச்சுக்களும்தான் புதிய அரசு மக்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் குடியரசு தினத்தின் பரிசுகளாக இருக்கின்றன. எனவே இந்த நிலையில் இந்தியாவின் எதிர்காலம் இருட்டாகத் தென்படுகிறது. இவற்றுக்கு இடையே அடுத்த குடியரசு தினத்துக்குள்ளாவது மக்களுக்கு இந்திய அரசியல் சட்டம் தரும் மதசார்பற்ற ஜனநாயக நம்பிக்கை வெளிச்சத்தை மீண்டும் நீடித்துத் தரவேண்டியது அரசின் கடமை.
வெல்க இந்தியா! வெல்க ஜனநாயகம்!
'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி M.Com.,
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment