உத்திர பிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களில் ஒருவரும் சட்டமன்ற தேர்தல் வேட்பாளருமான தர்மேந்திர சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து அலிகார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திர கவுட் கூறுகையில், அலிகார் அருகே உள்ள பன்னாதேவி பகுதியில் தனக்கு அறிமுகமானவர்களை பார்ப்பதற்காக தர்மேந்திரா சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் 11 காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி சவுத்ரியின் கார் டிரைவர் கூறும் போது, நாங்கள் பன்னாதேவி பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு நபர்கள் காரை வழிமறித்து நிறுத்தியதுடன் சவுத்ரி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறினார். சுட்டுக் கொல்லப்பட்ட சவுத்ரி வரும் 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அட்ரவுலி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment