உள்ளுரில் வேலை வாய்ப்பு இன்றி, வறுமையைப் போக்க வட்டிக்கு கடனை வாங்கி வெளிநாடுகளுக்கு பிழைக்க போவதே கொடுமையானது. அதிலும் சென்ற நாட்டில் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் தகவலைப் பெறுவதிலிருந்து இறந்தவர் உடலை கொண்டு வருவது வரை நேரிடும் துயரங்கள், இறந்தவர் குடும்பமும் ஒரு முறை இறந்து மீள்வதற்கு சமம்.
அத்தனை கடுமையானவை இதற்கான வழிமுறைகளும் அதை மேற்கொள்ளும விதங்களும்.
நமது தூதரகங்களும், அதற்கான அதிகாரிகளும் உதவுவதில் கூட இந்தியர்களை தமிழர்கள், தமிழர்கள் அல்லாதவர்கள் என தரம் பிரித்து வைத்திருப்பதுதான் இதற்கு காரணம்.
சில தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணா விரதமிருந்த மேலூர் சென்னகரம்பட்டி கிராம மக்கள், “எங்க ஊரை சேர்ந்த சுந்தரம், ஊரில் சரியான வேலை அமையாததால், ரொம்ப கஷ்டப்பட்டார். மூணு புள்ளைங்க வேற, அதனால வட்டிக்கு கடன் வாங்கி ஐந்து மாசத்துக்கு முன்புதான் ஒரு ஏஜெண்டு மூலம் சவூதி அரேபியா நாட்டுக்கு போனார்.
அங்கு ஒரு அரேபியர் வீட்டு டிரைவராக வேலைக்கு செய்தார். போய் பெருசா ஒண்ணும் வீட்டுக்கு அனுப்பலை. இப்படி போயிட்டிருக்கும்போதுதான் கடந்த பதினான்காம் தேதி இறந்துவிட்டதாக அவர் வேலை செய்யும் வீட்டின் முதலாளி தகவல் கொடுத்தார். அதற்கு பின் அந்தசெல் நம்பரில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நல்லா இருந்தவர் திடீர்னு எப்படி இறந்தார் என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், அவர் உடலை ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடந்த மாதம் மதுரை கலெக்டரிடம் நாங்கள் மனு கொடுத்தோம்.
இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை. இறந்தவருக்கான காரியங்கள் எதையும் செய்ய முடியவில்லை. கஷ்டப்படும் சுந்தரம் குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்கலை அதனால்தான் உண்ணாவிரதம் இருக்கிறோம்’’ என்றார்கள்.
சுந்தரத்தின் மனைவி ஆசைப்பொன்னு, ”சவுதிக்கு வேலைக்கு போன என் கணவர் எப்படி இறந்தார், அவர் இயற்கையாக இறக்கவாய்ப்பில்லை, அவரை ஏன் ஊருக்கு அனுப்பி வைக்க அந்த அரபியும் முயற்சி எடுக்கவில்லை, கலெக்டர் ஆபீசு, தூதரக ஆபீசுக்கும் மனு அனுப்பிவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையுமில்லை. மூன்று குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படும் எனக்கு யாரும் உதவவில்லை.”என்றார் அழுதபடி.
இதேபோல் தென்னாப்பிரிக்க நாட்டுக்கு வேலைக்கு சென்ற தன் கணவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவரது உடலை ஊருக்கு கொண்டுவர உதவும்படியும் திருமங்கலத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
‘’சுப்புராஜ்க்கு ஒன்பது வருடத்துக்கு முன் திருமணம் ஆச்சு. ஆறு வயதில் பையன் இருக்கிறான். ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம். ஊரில் பல வேலைகள் செய்தும் எந்த முன்னேற்றமுமில்லாததால் ஐந்து வருடங்களுக்கு முன்பு எத்தியோப்பியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.
அங்கு சரியான ஊதியம் கிடைக்காததால், இடையில் ஊருக்கு வந்து கேரளாவில் வேலை பார்த்தார். அங்கிருந்த நண்பர் மூலம் தென்னாப்பிரிக்காவில் கோல்டன் பிளாஸ்டிக் கம்பெனியில் மீண்டும் வேலையில் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. நேற்று அவர் இறந்து விட்டதாக அங்கிருந்து தகவல் வந்தது. அதற்குப்பின் எந்த தகவலும் இல்லை. அங்கிருந்து அவர் உடலை கொண்டு வருவதற்கான வழி தெரியவில்லை. அதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்’’ என்றார் சுப்புராஜின் உறவினர்.
நம்மிடம் பேசிய இந்திராணி, ‘’அன்று காலையில் வழக்கம்போல் பேசினார். கொஞ்ச நேரத்தில் இப்படி ஒரு தகவல் வருகிறது. நானும் என் பிள்ளையும் இனி என்ன செய்வோம்’’ என்று அரற்றி அழுதார்.
அப்போது மதுரை வந்திருந்த வைகோவிடமும் இதை முறையிட்டார். ‘’அதிகாரத்தில் நான் இல்லையம்மா’’ என்று, ஆறுதலோடு முடித்துக்கொண்டார் அவர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து சுப்புராஜின் உடலை கொண்டு வர விரைவாக ஏற்பாடு செய்வதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அப்போது உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அவர் உடல் கொண்டுவரப்படவில்லை.
இதைவிட கொடுமையானது ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடியை சேர்ந்த லதாவின் கதை. மலேசியாவில் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் தர்மராஜ், கடந்த 2008 ஆம் ஆண்டு , உடன் வேலை செய்தவர்களாலேயே கொலை செய்யப்பட்டார். அப்போது அவர் வைத்திருந்த நகை மற்றும் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைக் கோரியும் கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. .
இப்படி தமிழகம் முழுவதிலும் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய் மரணமடைந்தும் தகவலின்றி காணாமல் போயும் உள்ளனர். அவர்களது உறவினர்கள் தம் உறவை தாய் நாட்டுக்கு கொண்டு வரும்படி நம் அரசு அதிகாரிகளிடம் மன்றாடினார்கள்.. கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தனை கோரிக்கைகளும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.
அதே நேரம் மற்ற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் இதேபோல் சம்பவங்கள் நேர்ந்தால் அந்த மாநில அரசாங்கமும், தூதரகமும் விரைவாக செயல்பட்டு உடலை கொண்டு வருவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை அந்தந்த நாடுகளிடமிருந்து பெற்று தருகிறார்கள்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய நாம் தமிழர் மாணவர் பாசறையின் முகவை மாவட்ட செயலாளர் ராஜூ, “தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான் உடலுழைப்பு தரும் கஷ்டமான வேலைகளை செய்ய அதிகமான எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் சிந்தும் வியர்வை மூலம் நம் நாட்டுக்கு அந்நிய செலவாணியும் கிடைக்கிறது. ஆனால், அவர்களுக்கான தொழில் பாதுகாப்போ, உயிர் உடைமை பாதுகாப்போ கொஞ்சமும் இல்லை. அங்கிருக்கும் தூதரகங்கள் தமிழ் தொழிளாலர்களுக்கு கொஞ்சமும் உதவுவதில்லை. மரணம் நேர்ந்தால் அதுபற்றி எந்த விசாரணை நடதத்துவதோ விவரம் தெரிவிப்பதோ இல்லை.
இறந்தவருக்கு இறுதி காரியத்தையாவது செய்யலா மென்றால், ஊருக்கு உடலைக் கொண்டுவரும் முயற்சிகளிலும் முனைப்பு காட்டுவதில்லை. தமிழர்கள் என்றால் இந்திய அதிகாரிகளுக்கும் இளக்காரம் என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.
இதனால் பல நாட்டு மார்ச்சுவரிகளில் அனாதைப் பிணங் களாக தமிழர்கள் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எத்தனை பேர் வெளிநாட்டில் இறந்து போயுள்ளனர். அவர்கள் உடல்களை கொண்டுவர எவ்வ ளவு மனுக்கள் வந்தது, அதில் எத்தனை பேர் உடல் கொண்டுவரப்பட்டது, அந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கிய இழப்பிடு எவ்வளவு என்பது பற்றி ஆர்.டி.ஐ. மூலம் மனு செய்தேன். உருப்படியாக எந்த பதிலும் வழங்கவில்லை. இறந்து போன பத்துப்பேர்களின் பட்டியலை மட்டும் கொடுத்துள்ளனர்.
மற்ற ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று அதில் சொல்லியுள்ளனர். வெளிநாட்டில் வேலைக்கு செல் பவர் பற்றிய எந்த ஆவணமும் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. இந்த அவலத்தை எங்கே போய் சொல் வது? இந்த நிலையை தவிர்க்க இதற்கென்று தமிழக அமைச்சரவையில் ஒரு தனியே ஒரு துறை ஏற்படுத்தினால்தான் இப்பிரச்சனை தீரும்.“ என்றார்.
இது பற்றி கலெக்டர் அலுவலகத்திலுள்ள வெளிநாட்டுக்கான பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தால், ‘’பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கு கொண்டுதான் இருக்கிறோம். வருகிற மனுக்களை, தலைமை செயலகத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் அதை தூதரகங்களுக்கு அனுப்புகிறார்கள். அதில் சில சம்பிரதாயங்கள் உள்ளன. தொடர்ந்து பாலோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட நாடுகள்தான் பாடியை அனுப்ப கெடுபிடி செய்கின்றன’’ என்றார்.
செத்தாலும் தமிழனுக்கு நிம்மதியில்லை!
-செ.சல்மான்
படங்கள் : பா.காளிமுத்து
No comments:
Post a Comment