இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றார்.
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சேக்கு மக்கள் படுதோல்வியை கொடுத்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியுள்ளனர். ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலைக்கு இலங்கை வடகிழக்கில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களின் வாக்குகளே முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபராக சிறிசேனா கடந்த 9–ந் தேதிலேயே பதவி ஏற்றார்.அவரது அமைச்சரவை பதவியேற்றது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் சிறிசேனாவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
எனவே இலங்கையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சிறிசேனா துணிச்சலுடன் தொடங்கியுள்ளார்.அவர் ராஜபக்சே காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களை பதவியில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டார். இதன் மூலம் ராஜபக்சேயின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரையும் களை எடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் ஈழ தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் சிறிசேனா ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. தனது வெற்றியை தமிழர்கள்தான் உறுதி செய்தனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை சிறிசேனா தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்ய தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையே தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடகிழக்கு மாகாணங்களின் கவர்னர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சிறிசேனா சம்மதித்துள்ளார்.
2009–ல் போர் முடிந்த பிறகு வடக்கு மாகாண கவர்னராக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் சந்திரஸ்ரீயை, ராஜபக்சே நியமனம் செய்திருந்தார். இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரி போல வெளிப்படையாக செயல்பட்டு வந்தார். வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைத்த பிறகும் தமிழ் முதல்–மந்திரி விக்னேஸ்வரன் செயல்பட முடியாதபடி அவர் முட்டுக் கட்டையாக இருந்து வந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகளையும் தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்தார். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறி வருகிறார்கள்.
இதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிசேனா விரைவில், அரசியல் தொடர்புள்ள ஒருவரை வடக்கு மாகாண கவர்னராக நியமனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பாலச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஈழ தமிழர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன் சேகா வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர்களிடமே ராணுவம் திரும்ப ஒப்படைக்கும் என்பதே அந்த இனிப்பான செய்தியாகும்.
இது தொடர்பாக சரத் பொன்சேகா கூறுகையில்
‘‘2009–ல் போர் நடந்த சமயத்தில் ராணுவத்தை நகர்த்த இடம் தேவைப்பட்டது. எனவே தமிழர்களின் நிலம் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தற்போது சூழ்நிலை மாறி விட்டதால், தமிழர்களின் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்’’ என்றார்.
ஈழ தமிழர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை, தங்கள் பகுதியில் அளவுக்கு அதிகமாக உள்ள ராணுவ வீரர்களை அகற்ற வேண்டும் என்பதாகும். இது தொடர்பாகவும் சிறிசேனா பரிசீலினை செய்து வருகிறார்.
வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று சிறிசேனா தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார். எனவே வடக்கில் உள்ள ராணுவம் முழுமையாக விலகாது என்பது உறுதியாகி உள்ளது.
என்றாலும் தமிழர்களை திருப்திப்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் ராணுவம் வேறு இடத்துக்கு நகர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தமிழர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தின் பலம் குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சிறிசேனா அரசின் இந்த அணுகுமுறை நீடித்தால் நன்றாக இருக்கும் என்று ஈழ தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment