எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்...ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக....!!
முன்குறிப்பு: சகோதரர்.யுவன் அவர்களை காப்பாற்றும் நோக்கமோ, அவருக்கு வக்காலத்து வாங்கும் அவசியமோ துளியும் எனக்கில்லை. ஒரு முஸ்லிமாக அவர் செய்த செயலுக்கான விமர்சனத்திற்கு எதிர்வினை தான் இந்த பதிவே தவிர, அவர் இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதும், மாற வேண்டியதும் இன்னும் ஏராளம்...!! எல்லாம் வல்ல இறைவன் அவரையும் நம் அனைவரையும் நேரான வழியில் நடத்த போதுமானவன்... !! ஆமின்...
பிரபலமா இருக்குறதே ப்ராப்ளம் தான். அதிலும் அந்த பிரபலம் ஒரு இஸ்லாமியனாக இருந்து விட்டால் போதும், அது உலக மகா ப்ராப்ளம் இந்த நாட்டில் இருக்கும் ஊடக அன்பர்களுக்கு...!! பின்ன என்னங்க!!! சகோதரர்.யுவனின் முதல் இரண்டு திருமண பந்தங்களும் தோல்வியடைந்து விரக்தியில் இருந்த சூழலில், அவரின் அன்புத்தாயாரின் மரணமும் இதயத்தில் இடியா இறங்கி இருக்கு... குடும்ப வாழ்வையும், தாயையும் இழந்து தனிமையின் கொடுமையில் இருந்த அவருக்கு, அவருடைய இஸ்லாமிய வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் மூலமா இஸ்லாம் பத்தி தெரிஞ்சு, அதில் அமைதி கண்டு, அதை புரிஞ்சு முழு மனதுடன் விரும்பியே இஸ்லாத்த ஏத்துக்கிட்டார்...!! இத அவரே தன்னோட ஒரு பேட்டில விளக்கமா சொல்லிட்டார் ..!!
சகோதரர்.யுவனுடைய மத மாற்றம் குறித்து அவருடைய சகோதரி.பவதாரிணியும் ட்விட்டரில் தன் குடும்ப சார்பாக பின்வரும் விளக்கத்தை அளித்து இருந்தார்..!
'ஆம் என் அண்ணன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்களது குடும்பம் அவரது முடிவை பரிபூரணமாக ஆதரிக்கிறது. எங்கள் தந்தையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். சிறு வயதிலிருந்தே மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வளர்ந்தவர் என் அண்ணன். தனது கடின உழைப்பால் 100 படங்களுக்கு மேல் இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர் என் அண்ணன். இப்படிப் பட்ட நல்லொழுக்கம் உள்ள ஒருவரை பலரும் வார்த்தைகளால் காயப்படுத்துகின்றனர். அவரின் குடும்பத்தவரான எங்களுக்கு இது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. எந்த முடிவை எடுத்தாலும் ஒரு சிறந்த மனிதனாக வாழ்வதில்தான் உள்ளது. எனது அண்ணன் அதில் கண்டிப்பாக வெற்றி பெற்று பலருக்கு பாடம் புகட்டுவார்' என்று பொரிந்து தள்ளியுள்ளார் - பவதாரிணியின் ட்வீட்
சகோதரர் யுவனின் மூன்றாம் திருமணத்துக்குப் பிறகு அவரின் தங்கை பவதாரிணி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்....
'யுவன் இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டார். அவரது நண்பர்களிடம் தனக்கு தோதான ஒரு முஸ்லிம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க சொல்லிக் கேட்டுக் கொண்டார். இவரது நண்பர்கள் பொருத்தமான இஸ்லாமிய பெண்ணை தேர்ந்தெடுத்து யுவனிடம் ஆலோசனையைக் கேட்டனர். அந்த பெண்ணை யுவனுக்கும் பிடித்துப் போகவே இன்று திருமணம் இனிதே நிறைவேறியுள்ளது. எப்போதுமே யுவனின் சந்தோஷத்துக்கு நாங்கள் குறுக்கே நின்றதில்லை. இந்த திருமணத்தால் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அதுதான் நமக்கு வேண்டியது' என்று மிக அழகிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இதற்குப் பிறகும், சகோதரர்.யுவன் இஸ்லாமிய பெண்ணை மணம் முடிக்கதான் மதம் மாறினார்ன்னு கூச்சல் போட்டுக்கிட்டு இருக்காங்க சில ஊடக அன்பர்கள் மற்றும் முகநூலில் இருக்கும் கலாச்சார காவலர்கள் ..!! இவங்களுக்கு எல்லாம் பிரச்சனை சகோதரர்.யுவன் மூனாவதா திருமணம் முடிச்சதா இல்ல இஸ்லாத்திற்கு மதம் மாறுனதான்னு சின்ன குழந்தைக்கு கூட புரியும்.. இல்லியா பின்னே?
சினிமா துறையில் எத்தனையோ பிரபலங்கள் மறுமணம் செஞ்சும், ரெண்டாம், மூனாம் திருமணம் செஞ்ச பெண்களும் , ஆண்களும் இருக்காங்க. ஏன் கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழும் பிரபலங்களும் உண்டு... !! அவங்கள பத்தி எல்லாம் மூச்சு விடாத இந்த கலாச்சார காவலர்கள், சகோதரர்.யுவன் புனித இஸ்லாத்தின் சுவை உணர்ந்து அகில உலகுக்கெல்லாம் தாய் மதமான இஸ்லாத்துக்கு மாறினத ஏத்துக்க முடியாம காழ்ப்புணர்ச்சில அவருடைய சொந்த வாழ்க்கைல பூதக்கண்ணாடி வச்சு பார்த்து அத பொது வெளில கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம விமர்சிச்சு தங்களின் இயலாமைய வெளிப்படுத்திக்கிட்டு இருக்காங்க...!
அவர் நினைத்து இருந்தா, அவருடைய அந்தஸ்துக்கும், புகழுக்கும் மதம் மாறாமலே இன்னொரு பெண்ணை மணம் முடித்து இருக்க முடியும். அதுக்கு சட்டத்துல எந்த தடையும் இல்ல.. ஆனா அவருடைய உள்ளம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட பின்பே இஸ்லாத்தின் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு முஸ்லிம் பெண்ணை மணம் முடித்து இருக்கிறார். இந்த மத மாற்றத்தால் தன் புகழ், பெயர் எல்லாம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும், எந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள எதிர்கொள்ள வேண்டி இருக்கும்னு தெரிஞ்சே தான் அவரு இஸ்லாத்த ஏத்துக்கிட்டு இருக்காரு..! இதில இருந்தே புரியலையா அவரு இந்த உலகில் கிடைக்கும் அற்ப புகழயோ அல்லது சந்தோசத்தையோ மனதில் வைத்து இஸ்லாத்தை ஏற்கவில்லை என?
இதுக்கு மேலும் சகோதரர்.யுவனின் மத மாற்றம் திருமணத்துக்காக தான் என எண்ணிக்கொண்டு இருப்பவர்களின் சிந்தனைக்கு...
அவர் இந்துவாக இருந்தே மூனு என்ன இன்னும் எத்தனை திருமணம் வேணும்னாலும் டைவர்ஸ் பண்ணி டைவர்ஸ் பண்ணி திருமணம் பண்ணிட்டே இருக்கலாம். ஏன்னா, இந்து திருமண சட்டத்தில் அட் எ டைம் ஒரு மனைவிதான் இருக்கணும் என்றுதான் இருந்துச்சு..! ஆனால் எப்போ?? 22-11-2009 க்கு முன்னாடி வரை மட்டுமே....! மேலும்......
டைவர்ஸ் பண்ணிக்க என்றைக்குமே கணக்கே இல்லை..! தவறா தலாக் விட்டால் அல்லாஹ்வின் அர்ஷ் (இருக்கை) குலுங்கும் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கை போல எல்லாம் அவங்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும், பயமும் இல்லை. ஒரு இந்துவின் நூறாவது விவாகரத்தை கேள்விப்பட்டாலும் கூட, கோர்ட்டில் உள்ள நீதி தேவதையின் தராசு கூட ஆடாது, அசையாது..! கண்ணை மூடிட்டு விவாகரத்து வழங்கும். !!
ஒரே நேரத்தில் இரு மனைவிக்கும் சட்டப்பூர்வமாக மனைவி அந்தஸ்து தரத்தான் இஸ்லாம் போனார் (அதாவது, பாருங்க இது முதலாவது தான்... இன்னும் மூன்று திருமணம் செய்வார் பாருங்க... அதுக்குத்தான் போனார்...) என்பதும் தவறான அறியாமை வாதமே.
ஏன்னா, இந்து மத சட்டத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்துச்சு. நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, லோதா ஆகியோர் முன்னிலையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும் போது இறந்து விட, அவரின் சொத்து படிக்காத முதல் மனைவிக்கும், அவரின் வேலை படிச்ச இரண்டாம் மனைவிக்கும் (கவனிக்கவும்... துணைவி அல்ல... மற்ற எந்த கெட்ட பெயர்களும் இல்லை....) என்று அவர்களாக பிரித்து கொண்டதை எதிர்த்து... 'அதெப்படி, இரண்டாம் மனைவி வேலைக்கு உரிமை கோர முடியும்?' என்று அரசு தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இரு மனைவிகள் சமரசம் செய்து கொண்டு விட்டால், அதில் தலையிட அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதைப் பற்றி அரசு ஏன் கவலைப்படவேண்டும்? முதல் மனைவி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இரண்டாவது மனைவிக்கு தாராளமாக கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கலாம்' என்று அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இந்துவில் இரண்டாம் மனைவிக்கும் மனைவி என்ற அந்தஸ்தை வழங்கி சட்டப்பூர்வ உரிமை தந்துள்ளனர். இனி அதுதான் சட்டம். எனவே, யுவன் அப்துல் காலிக்காக மாறாமல் யுவனாக இருந்தே சட்டப்பூர்வ மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம்.
சினிமா துறை மட்டுமல்லாது மற்ற துறையில் உள்ள பிரபலங்களும் கூட இந்துவாக இருந்துக் கொண்டே விவாகரத்து செய்து செய்து பல மனைவிகளை/கணவர்களை திருமணம் செய்துள்ளனர். இன்னும் பலர் விவாகரத்து செய்யாமலேயே, வெவ்வேறு ஊரில் வெவ்வேறு வீட்டில் பகிரங்கமாகவே திருமணம் செய்தும் மனைவி/கணவர் என்ற அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றனர். சட்டப்பேரவையிலும் எந்த வித கூச்சமுமின்றி துணைவி என்றும் சொல்லி வருகின்றனர். இதனை பகிரங்கப்படுத்தி பல பட்டியல்கள், முகநூலில் வெளியானது என்பது குறிபிடத்தக்கது.
இதை எல்லாம் புரிஞ்சுக்காம காழ்ப்புணர்ச்சியில் கூச்சலிடும் மாற்று மத அன்பர்களை கூட மன்னிச்சிடலாம், ஆனால்....
ஒரு மனிதன் இறைவன் ஒருவனே என்பதை ஏற்று கலிமா சொல்லி விட்டாலே முஸ்லிம் என்பதில் சேர்த்தி. பல இஸ்லாமிய சகோதரரர்கள் எவ்வித பேதமும் பாராமல் சகோதரர்.யுவனின் மன மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதே வேளையில் சில இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரர்.யுவனின் திருமண புகைப்படங்களை விமர்சித்து கமென்ட் இட்டதை சில முகநூல் பக்கங்களில் காண நேர்ந்தது மிகுந்த வருத்தத்தை தந்தது... !!
"இன்னார் கலிமா சொல்லி இருந்தால் மட்டும் போதாது... இன்ன ஹதீஸை ஏற்கிறாரா.... மறுக்கிறாரா... என்ன நிலைபாட்டில் இருக்கார்... இன்ன குர்ஆன் ஆயத்தில் என்ன விதமான புரிதலில் இருக்கார்... யார் யாரோடு சங்காத்தமா இருக்கார்... தொப்பி போடுறாரா இல்லையா அதெல்லாம் பார்த்த பிறகுதான் முஸ்லிம்ன்னு ஒத்துக்குவோம்ன்னு எல்லாம் சொல்வது அவர்களின் புரிதலில் உள்ள ஊனத்தையே காட்டுகிறது..!!
அவர் இஸ்லாத்திற்கு ரொம்பவும் புதிது... இஸ்லாத்தில் பிறந்து, பல வருடம் மார்க்கத்தில் கற்று தேர்ந்திருக்கும் நம்மிடமே எக்கசக்க தவறுகள் இருக்கு. நாமே பல விஷயங்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு, சரி செய்து கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்... இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.யுவன் அவர்களை மனிதப் புனிதராய் எதிர் பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை...!
எல்லாம் வல்ல இறைவன் சகோதரர்.அப்துல் காலிக்-கிற்கும் அவரை மருமகனாக ஏற்றுக்கொண்ட கீழக்கரை குடும்பத்துக்கும் அருள் புரிவானாக. ஆமீன்..!
"இலகுவாக்குங்கள்; சிரமத்தை கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடி விடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலி, ஸஹீஹில் புஹாரி.69
டிஸ்கி: இஸ்லாத்தை புதிதாக ஏற்பவர்கள் அன்று பிறந்த பாலகனை போன்றவர்கள்.. அவர்களின் குறைகளை அழகிய முறையில் எடுத்து சொல்லி எது சரி எது பிழை என கற்றுத்தருவது ஒவ்வொரு மூமினின் கடமையாகும்... அவ்வாறன்றி எடுத்த எடுப்பிலேயே அவர்களைப் பற்றி குறைகளையும் அவதூறுகளையும் அள்ளி வீசுபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..! ஒரு மூமினின் மானம் மற்றொரு மூமினுக்கு அமானிதம் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்...
உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்
நன்றி : முஸ்லீம் பெண்மணி
No comments:
Post a Comment