வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்குத் தபால் வழியாக ஓட்டளிக்கும் உரிமை வழங்குவது தொடர்பாக 8 வாரங்களுக்குள் முடிவு அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வேண்டி பிரவாசி பாரத் அமைப்பின் சேர்மன் நாகேந்தர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக, ஊரில் வசிக்கும் தம் உறவினர் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டு போடும் வசதி செய்து கொடுப்பது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிசனுக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உறவினர்(ப்ராக்ஸி) மூலமாக ஓட்டளிக்கும் வசதி செய்து கொடுக்கலாம் என தேர்தல் கமிசன் உச்ச நீதிமன்றத்துக்குப் பதில் அனுப்பியது. எனினும் அதனை நடைமுறைபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமெனவும் கூறியது. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக தம் முடிவைத் தெரிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், தபால் வழியாக ஓட்டளிக்கும் வசதியினைச் செய்து கொடுப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கோரியது. முடிவைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டுமென மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், காலம் தாழ்த்துவதற்கான முயற்சி இது என மனுதாரர் தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு இந்தியர்களுக்குத் தபால் வழியாக ஓட்டுபோடும் வசதி செய்து கொடுப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எட்டாக்கனியாக இருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமை, எட்டு வாரத்தில் கைக்கெட்ட உள்ளது வெளிநாட்டு இந்தியர்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவின்படி, பாஸ்போர்ட் கைவசம் வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்குத் தபால் வழியாக பேலட் பேப்பர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தம் ஓட்டுகளைத் தபால் வழியாகவே அவர்கள் தேர்தல் கமிசனுக்கு அனுப்பி வைக்கும் முறை நடைமுறைக்கு வரும்.
பாண்டிச்சேரியில் வாழும் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வசதியை ஃப்ரான்ஸ் அரசு செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment