போக்குவரத்து நெரிசலின் புகலிடமாக விளங்கும் சென்னையில் விபத்துக்களும் சர்வசாதாரணமாக நடக்கின்றன. சென்னையையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் சர்வசாதாரணமாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இவற்றை யாரும் கண்டுக்கொள்வதில்லை. குறிப்பாக நாய்கள், மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. திடீரென சாலையின் குறுக்கே வரும் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
வாகனங்கள் மோதி நடக்கும் விபத்துக்களை விட கால்நடைகளால் விபத்துக்கள் நடப்பது சமீபகாலமாக அதிகரித்து விட்டன எனலாம். சென்னை ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரனை, ஓ.எம்.ஆர். மெரீனா மற்றும் பைபாஸ் சாலைகளில் கால்நடைகளால் விபத்துக்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இத்தகைய கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும், போக்குவரத்து காவல்துறையினரும் முன்வருவதில்லை
கடந்த 10ஆம் தேதி மட்டும் சென்னை மேடவாக்கம், பெருங்களத்தூர் பகுதியில் 4 கன்றுக்குட்டிகள் விபத்தில் சிக்கியுள்ளன. இவ்வாறு விபத்தில் சிக்கும் கன்றுக்குட்டிகளையும், மாடுகளையும் யாரும் காப்பாற்ற முன்வருவதில்லை. சாலையின் நடுவே உயிருக்குப் போராடும் இந்த கால்நடைகள் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதும் போது அவைகளும் பலியாவதோடு வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். சென்னையில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எழுத்தளவில் மட்டுமே உள்ளது. சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தும் அதை யாரும் கண்டுக்கொள்வதில்லை.
சாலையில் மட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளங்களிலும் கால்நடைகள் சுதந்திரமாக திரிகின்றன. இதில் சில கால்நடைகள் மீது ரயில் மோதி பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்கின்றன. தண்டவாளத்தை கடக்கும் மாடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி அதன் இன்ஜின் பழுதான சம்பவங்களும் உள்ளன. தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், மாடுகளை கண்டுக்கொள்வதில்லை.
இதுகுறித்து பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் அருண்பிரசன்னாவிடம் பேசியபோது, “கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவது உண்மை தான். வாகனத்தில் சிக்கும் கால்நடைகளைப் பற்றி யாரும் பெரியளவில் அக்கறை செலுத்துவதில்லை. கடந்த 10ஆம் தேதி இரவு மேடவாக்கம், சந்தோஷபுரம், பெருங்களத்தூர் ஓ.எம்.ஆர் சாலையில் மட்டும் 4 கன்றுக்குட்டிகளின் கால்கள் உடைந்து ரத்தவெள்ளத்தில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று அந்த கன்றுக்குட்டிகளை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளோம். அந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. காளைக் கன்றுகளை விலைக்கு வாங்கும் சிலர் அவற்றை சாலைகளில் விட்டுவிடுகின்றனர்.
குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு அவைகளை விற்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களை குறித்த விவரம் தெரிவதில்லை. எனவே, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சென்னையில் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை. நாய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 2012 டிசம்பர் மாதம் முதல் இதுவரை முறையாக அனுமதியில்லாமல் கேரளவுக்கும் மற்ற பகுதிகளுக்கும் கடத்தி செல்லப்பட்ட 1,302 மாடுகளை மீட்டுள்ளோம். சாலைகளில் விபத்தில் சிக்கிய 50 மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். எனவே, சாலையில் திரியும் மாடுகளை மீட்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருக்களில் தொல்லை கொடுக்கும் நாய்களை பிடிப்பதிலேயே எங்களுக்கு பல எதிர்ப்புகள் கிளம்புகின்றன. மேலும், நாய்களை பிடிப்பதற்கு தேவையான நிதியும் இல்லை. சென்னையில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதற்கு அனுமதியில்லை. அதையும் மீறி சுற்றித்திரியும் கால்நடைகளை அவ்வப்போது பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறோம்” என்றனர்.
நாய்கள் பிடிக்க 50 ரூபாய்: சென்னை மாநகராட்சியில் நாய்கள் தொல்லைக்கு 1903 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம். இதில் பேசினால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் வந்து நாய்களைப் பிடித்து செல்வார்கள். மேலும் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். நாய்களை பிடிக்க தலா 50 ரூபாயும், கருத்தடைக்கு 450 ரூபாயும் செலவழிக்கப்படுகிறது. இதே போன்று மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைகள் மீது காவல்துறையும், மாநகராட்சியும் கனிவு காட்டுமா?
No comments:
Post a Comment