காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு!
மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை, ‘Story of my life’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில்,“காந்தியாரை சுட்டுக் கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்” என்று எழுதியிருக்கிறார்.
ஏ.ஜே. குர்ரான் எழுதிய ‘Millitant Hinduism in Indian politics’ என்ற நூலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவருடன், சுற்றுப் பயணங்களில் உடன் சென்று கொண்டிருந்தவன் கோட்சே என்பதை எடுத்துக் காட்டி யிருக்கிறார்.
நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, காந்தியாரைக் கொலை செய்யப் புறப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகளை தனது வாக்குமூலத்தில் விவரிக்கிறார். காந்தியாரை சுட்டுக்கொல்ல சென்றபோது, கோட்சே பாடிய பிரார்த்தனைப் பாடலை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அது ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களில் பாடப்படும் சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடல். கோட்சே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்துவிட்டு, பிறகு அதிலிருந்து விலகிப் போய்விட்டார் என்ற ஒரு வாதத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முன் வைத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். அது உண்மைக்கு சம்பந்த மில்லாத வாதம் என்பதை கோபால் கோட்சேயின் இந்த ஒப்புதல் வாக்கு மூலமே காட்டிக் கொடுத்துவிடுகிறது.
கோட்சே பாடிய அந்த பிரார்த்தனைப் பாடல் – அவர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களில் பாடப்பட்ட பாடல் அல்ல; அப்போது மராத்திய மொழியில்தான் அவர்கள் பாடினார்கள். அதற்குப் பிறகு 1940 ஆம் ஆண்டில்தான் கோட்சே உச்சரித்த அந்த சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடல் நடைமுறைக்கு வந்தது.
இந்தப் பாடல் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் இரகசியமாக அதை வைத்திருக் கிறார்கள்.
1932 ஆம் ஆண்டிலேயே நாதுராம் கோட்சே – ஆர்.எஸ்.எஸ்.சை விட்டுப் போய் விட்டார் என்றால், 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டிருந்த – ஒரு சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடலை – காந்தியாரைக் கொலை செய்வதற்கு முன்பே கோட்சே எப்படிப் பாடினான்?
இதிலிருந்து என்ன தெரிகிறது? கோட்சேவுக்கு கடைசி வரை ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருக்கிறது என்பது தானே? இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் மறுக்க முடியுமா?
நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே தந்த வாக்குமூலம் ‘May it please your honour’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. அந்த நூலின் 46ஆவது பக்கத்தில் நாதுராம கோட்சே பாடிய பிரார்த்தனை பாடல் தரப்பட்டிருக்கிறது.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் மூலம் சுதந்திரத் திற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற காந்தியாரின் கொள்கையை இந்தக் கூட்டம் – ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது!
காந்தியார் இந்துக்களை கோழையாக்கிவிட்டார் என்று அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். காங்கிரசுக் குள்ளே காந்தியார் எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் இடைவிடாது ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கூடாரம் காந்தியார் மீது எப்படிப் பகைமை கொண்டிருந்தது என்பதை காந்தியார் உதவியாளர் பியாரிலால் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:
“இந்து இராஷ்டிரம் அமைய வேண்டும் என்று சொன்ன முரட்டுத்தனமான கூட்டம், மராட்டிய மாநிலத்தில் இருந்தது. அவர்கள் பார்ப்பன பிற்போக்காளர்கள். அவர்களின் அரசியல் கருத்து காந்தியாருக்கு நேர் எதிரானதாகும். காந்தியாரின் அரசியல் கொள்கை, மராட்டியத் தலைவர் லோகமான்ய திலகருக்கு எதிரானதாகும் என்று அ வர்கள் கருதினர். திலகரின் கொள்கை மறைந்து போய்விடுமோ என்று அஞ்சினர். அதன் காரணமாக காந்தியாருக்கு எதிராக 25 ஆண்டு காலம் இடைவிடாது பிரச்சாரத்தை – அவர்கள் செய்து வந்தனர். காந்திஜியின் செல்வாக்கு வளருவது – அவர்களுக்கு விரக்தியை உண்டாக்கியது. இந்தக் கூட்டம் தான் 1934இல் புனேயில் காந்திஜி மீது வெடிகுண்டு வீச முயற்சி செய்தது. அப்போது காந்திஜி தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
இப்போது அவர்கள் காந்திஜியை கொலை செய்திருக்கிற திட்டம் அவர்களால் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
அதற்கு சரியான இளைஞரைத் தேடிப் பிடித்து அதற்கான பயிற்சிகளை கொடுத்து திட்டமிட்டு இதைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் காலில் போட்டிருக்கும் ஷூக்களுக்குள் காந்தி, நேரு உள்பட பல காங்கிரஸ் தலைவர்களின் படம் இருக்கும். அந்தப் படத்தை வைத்து, துப்பாக்கியால் சுட்டு, பயிற்சி பெறுவது அவர்கள் வழக்கம்” என்று பியாரிலால் தனது நூலில் எழுதியிருக்கிறார். (பக்கம் 751)
காந்தியார் மறைவு: பெரியார் வானொலியில் பேச்சு
காந்தியார் மறைவு செய்தி வந்தவுடன், தமிழ்நாட்டு வானொலி நிலையம் தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பேச செய்தது. கலவரங்களில் ஈடுபட வேண்டாம் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.
“பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்களனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது, அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை பெற்றுவிட்டன. காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக் குரியதாகும். பல திறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்து கொண்ட காந்தியார், இக் கொடுந் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்களென்றால் இது மிகவும் வெறுக்கத் தக்கதாகும்.
இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிகார கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வரவேண்டும். வடஇந்தியாவில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியேயாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல் மத வேறுபாடுகளை மறந்து சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும்.
தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்.”
(‘குடிஅரசு’ 7.2.48)
குறிப்பு: பெரியார் பார்ப்பனர்களை ஒழிக்கும் ஒரு வாய்ப்பாக இதை கருதாமல், அமைதி காக்கச் சொன்னதால், தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. இந்த நாகரிகத்தை பார்ப்பனர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் – ஜனவரி 2015
வெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2015
No comments:
Post a Comment