உடலில் தானாக தீப்பற்றி எரியும் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச நிலம் வழங்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் பரங்கினியை சேர்ந்த கர்ணன்-ராஜேஸ்வரி தம்பதியின் குழந்தையின் உடலில் தானாக தீப்பற்றி எரியும் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2013ஆம் ஆண்டு இவர்களின் இரண்டாவது குழந்தை ராகுலின் உடலில் தீப்பற்றிய போது, அவர்கள் வாழ்ந்து வந்த குடிசை வீடும் தீயில் கருகியது.
இதையடுத்து அரசு சார்பில் இலவச வீடும், குழந்தையின் பாட்டிகளுக்கு முதியோர் பென்ஷனும் வழங்கப்பட்டது.
இலவச வீடு தங்களுக்கு தான் வேண்டும் என்று கர்ணனின் பெற்றோரும், ராஜேஸ்வரியின் பெற்றோரும் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திலே சண்டையிட்டு கொண்டனர்.
கடைசியில் ராஜேஸ்வரின் ஊரான நொடிமொழியனூரில் வீடு ஒதுக்கப்பட்டு தற்பொழுது பாதியளவு கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி ராஜேஸ்வரிக்கு பிறந்த மூன்றாவது குழந்தையின் உடலிலும் தீப்பற்றி எரிந்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது அந்த குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வறுமையில் வாடும் தங்களுக்கு தொழில் தொடங்க உதவ வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
நெடிமொழியனூர் கிராமத்தில் பறவை பண்ணை அமைத்து தொழில் செய்ய மூன்று சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து நெடிமொழியனூர் கிராமத்தில் கர்ணனுக்கு வழங்க வேண்டிய இடத்தை தேர்வு செய்ய சென்ற வருவாய்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு, இலவச இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களில் பலத்த எதிர்ப்பு காரணமாக வருவாய்துறை அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்யாமலே திரும்ப சென்றுவிட்டனர்.
இது குறித்து பேசிய நெடிமொழியனூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், “2009ல் இந்த கிராமத்தில் வீடுகள் அடிக்கடி தீப்பற்றி எரிந்த போது காவல்துறை எவ்வளவு பாதுகாப்பு போட்டும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
தீய சக்திதான் வீடுகளை கொளுத்துகிறது என்று மக்கள் மத்தியில் புரளி கிளம்பியது. இதனால் காவல்துறையினர் யார் வீடு எரிகிறதோ அவர்களை கைது செய்வோம் என்று எச்சரித்து ஒருவரை கைது செய்தனர்.
அதன் பிறகு இந்த கிராமத்தில் வீடுகள் எரிவதே இல்லை. தற்பொழுது மீண்டும் ராஜேஸ்வரி குழந்தை விஷயத்தில் பேய், பிசாசு என்று அள்ளிவிடுகிறார்கள்.
ராகுல் எரிந்த போது அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்பட்டது. இதில் நியாயம் இருந்ததால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், மேலும் ஒரு குழந்தையும் எரியும் போது அதற்கான காரணத்தை கண்டுபிடிக்காமல், திரும்பவும் சலுகைகளை வழங்கிக்கொண்டிருப்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தை மருத்துவமனையில் எரியாமல், வீட்டில் மட்டும் ஏன் எரிகிறது என்பத்தை கண்டுபிடித்துவிட்டு அவர்களுக்கு எவ்வளவு சலுகைகள் வேண்டும் என்றாலும் வழங்கட்டும். அத்துடன் கர்ணன் இந்த ஊரே இல்லை. அவருக்கு ரேஷன் கார்டும் இங்கு இல்லை.
வேண்டும் என்றால் கர்ணனின் சொந்த ஊரான பரங்கினியில் இடம் ஒதுக்கித்தரட்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment