இங்கிலாந்தில் இறைச்சி கடையில் பயிற்சி பெற்றுவந்த வாலிபர் ஒருவர் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் கையை இழந்த போதும் 26 நாளில் இரும்புக்கையுடன் மீண்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ஷிர் கவுண்டியை சேர்ந்த சோமர்செட்டில் இயங்கி வரும் பி அண்ட் கே என்ற இறைச்சி கடையில் தாமஸ் ஸ்டீவன் என்ற வாலிபர் இறைச்சிகளை வெட்டும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இவர் கடந்த மாதம் வேலை செய்து கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற இறைச்சி வெட்டும் இயந்திரம் ஒன்றில் சிக்கி அவரது வலது கை வெட்டுப்பட்டுள்ளது.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் அலறிய தாமஸை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது வலது கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்ததால் வேறு வழியில்லாமல் வலது கை அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு தெற்கு சோமர்செட்டின், யோவில் நகரில் உள்ள மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிறுவனத்தின் முதலாளி பால் ஜெப்ரிக்கு 15,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.
ஏற்கனவே குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனிப்பட்ட முறையில் தாமஸின் விபத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாமஸ் சிகிச்சை முடிந்த 26 நாட்களில், செயற்கை கையுடன் மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், வீட்டில் போரடிக்கிறது அதான் இங்கு வந்து விட்டேன், இந்த செயற்கை கையால் இறைச்சி வெட்டுவது சுலபமாகத்தான் இருக்கிறது.
மேலும், இருக்கும் மற்றொரு கையை இனி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment