1996-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, சட்டசபைத் தேர்தல் என்றால் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள்ளாகவும், பாராளுமன்றத் தேர்தல் என்றால், தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள்ளாகவும் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலின் போதே இதுபற்றி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான விண்ணப்பங்களில் கையெழுத்திடுகின்றனர். ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், உரிய காலக்கெடு முடிந்த பிறகும் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதனையடுத்து வந்த மாநில தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் செய்த செலவுக் கணக்கினை உடனே தாக்கல் செய்யாவிட்டால் கட்சி அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பிரதான கட்சிகள் கணக்கை தாக்கல் செய்தன. அதன்படி தங்களிடம் சப்மிட் செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தொகைக்கான பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதன்படி 2014- பாராளுமன்ற தேர்தலின் மூலம் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா 714 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 813 ரூபாயும், அக்கட்சியை எதிர்த்து போட்டியிட்ட பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் 516 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரத்து 785 ரூபாயும் செலவிட்டிருக்கிறதாம்.
மேலும் தேசிய தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற இதர முக்கிய தேசிய கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் 51 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரத்து 854 ரூபாயும், பகுஜன் சமாஜ் 30 கோடியே 5 லட்சத்து 84 ஆயிரத்து 822 ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 18 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரத்து 169 ரூபாயும் செலவிட்டுள்ளதாக கணக்குக் காட்டியுள்ளன.
No comments:
Post a Comment