இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலத்தீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாகவும், ராஜபக்சே மகன்கள் சீனாவுக்கு தப்பி சென்று விட்டதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச் சென்று விட்டார். மாலத்தீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே விசா பெறத் தேவையில்லை.
விசா இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு ராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ராஜபக்சேவின் மகன்கள் சீனாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு ராஜபக்சே, தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முனைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்வது தொடர்பான ஆணையை தயாரிக்க அட்டர்னி ஜெனரலிடம், ராஜபக்சே கோரியதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ராஜபக்சேவுடன் தொடர்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அமைதியான முறையில் வெளியேறும்படியும், அதற்குரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, அதிபர் மாளிகைக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சேவை அழைத்துச் சென்று, டொரிங்டன் அவென்யூவில் உள்ள, வர்த்தகர் ஒருவரின் வீட்டில் விட்டதாகவும் கொழும்பு ரெலிகிராப் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment