இங்கிலாந்தில் கருப்பை இன்றி தாயாக முடியாத மகளுக்கு தனது கருப்பையை தானமாக கொடுத்து அதன் மூலம் தனது மகளை அழகான குழந்தைக்குத் தாயாக்கியிருக்கிறார் ஒரு தாய். தாயிடம் இருந்து கருப்பையை தானமாக பெற்ற அந்த பெண் அழகான குழந்தை ஒன்றினை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்து ஆரோக்கியமாக இருக்கிறார். இதேபோல் மற்றொரு பெண்ணும் தனது தாயிடம் இருந்து கருப்பையை தானமாக பெற்று தாயாகியுள்ளார். இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உடலுறுப்புகள், மற்றவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் நடைமுறை உள்ளது. தற்போது, கைகள், முகம், தோல்கள் மற்றும் பிற உறுப்புகளும் பொருத்தப்படுகின்றன. பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண்களும், புற்றுநோய் காரணமாக, கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களும் குழந்தையை பெற்றெடுக்கும் வகையில், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.
இதுவரை, கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு, இறந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட கருப்பை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு முன், துருக்கியிலும், சவுதி அரேபியாவிலும், இத்தகைய கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள், கருத்தரிப்பதில் தோல்வி ஏற்பட்டது. பிரிட்டன், ஹங்கேரி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இதற்கான சோதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், சுவீடன் நாட்டில், வெற்றிகரமாக, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு கடந்த அக்டோபர் மாதம் குழந்தையை பெற்றெடுத்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், மரபணுக் கோளாறால் பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தார். எனினும், அவரிடம் கருமுட்டைகள் இருந்தன. அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் தனது கருப்பையை அவருக்குத் தானம் செய்ய முன்வந்தார். 61 வயதான அந்தப் பெண்ணுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக மாதவிடாய் நின்றுவிட்டது.
இதனையடுத்து கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன், அவருடைய கருமுட்டைகளை ஆய்வுக்கூடச் சோதனை முறை மூலம் கருவூட்டப்பட்டது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முடிந்த ஓர் ஆண்டுக்குப் பிறகு, வளர்ந்த கருவை அவரது கருப்பையில் வைத்தனர். அதன் பிறகு மூன்று வாரம் கழித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்தப் பெண் கர்ப்பம் தரித்திருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 1.775 கிலோ இருந்தது. தற்போது அந்தக் குழந்தையும் தாயும் நலமாக உள்ளார்கள்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இதுகுறித்து, கோத்தன்பர்க் பல்கலைக்கழக டாக்டர் மேட்ஸ் பிரான்ஸ்டிராம், கருப்பை பொருத்தப்பட்ட பெண்களில், பெரும்பாலானோர், 30 வயதுடையவர்கள்; இவர்களுக்கு பரிசோதனை முயற்சியாக, கருப்பை பொருத்தப்பட்டுள்ளது; இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்; அறுவை சிகிச்சை முடிந்து, அனைவரின் கருப்பையும் ஆரோக்கியமாக, நல்ல முறையில் இயங்கி வருகிறது என்று கூறியுள்ளார். கருப்பை இல்லாத மகள்களுக்கு தாய்கள் கொடுத்த மிகப்பெரிய பரிசு இது என்று இந்த அறுவை சிகிச்சையை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment