தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அடையாள அட்டை
தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், புகைப்படம் எடுக்க தவறியவர்கள், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரையிலும் 440 நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிரந்தர மையங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையின் விவரங்களை பதிவு செய்து ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். பின்னர் இந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு கண் கருவிழி பதிவு, கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
6 கோடியே 74 லட்சம்
இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்ததற்கான ரசீது ஒன்று கொடுக்கப்படும். இந்த ரசீதை வைத்து இணையதளம் மூலமாக ஆதார் அடையாள அட்டை தபாலில் விண்ணப்பித்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதா? என்ற விவரத்தை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 5 கோடியே 1 லட்சம் பேரிடம் தகவல் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 73 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
காணொலி காட்சி மூலம் ஆலோசனை
மீதம் உள்ளவர்களையும் ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் விடுபடாமல் முழுமையாக இணைக்கவேண்டும் என்ற முனைப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நேற்று மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் தலைமையில் எழிலகத்தில் ‘காணொலி காட்சி’ (வீடியோ கான்பரன்சிங்) மூலம் 16 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் உடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மார்ச் மாதத்திற்குள்…
ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்களை விரைவாக பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்கள் வாரியாக தொடங்கப்பட்டுள்ள நிரந்தர மையங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?, செயல்பாட்டுக்கு வராத நிரந்தர மையங்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதே போன்று வருகிற மார்ச் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆதார் அட்டை முழுமையாக சென்றடைய வேண்டும். அதற்குள் நிறைவு செய்வதற்கு மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment