மதுரவாயல் மார்க்கெட் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பிளஸ் 2 வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை லட்சுமி (38) என்ற ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார். மாணவர்கள், கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து அறையை விட்டு வெளியே கிளம்பினர். அப்போது ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மாணவன் அமர்ந்திருந்த கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தவில்லை. இதனால், அந்த மாணவனை அழைத்த ஆசிரியை லட்சுமி, இதுபோல கம்ப்யூட்டரை சரியாக ‘ஷட்டவுன்’ செய்யாமல் விட்டால், அது பழுதடைந்துவிடும் என்று கூறி மாணவன் ராஜாவை கண்டித்துள்ளார். வகுப்பில் இருந்த சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் ராஜா, ஆசிரியை லட்சுமியை கன்னத்தில் சரமாரி அறைந்துள்ளான். இதில் காயமடைந்த அவர் அலறி யுள்ளார். பின்னர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். மாணவன் அடித்த அடியில் ஆசிரியை யின் காது ஜவ்வு கிழிந்துபோனதாக தெரிகிறது. ஆசிரியையின் அலறல் சத்தம்கேட்டு, பள்ளி வளாகத்தில் இருந்த சக ஆசிரியர்கள் ஓடிவந்தனர்.
இதனால், பயந்துபோன மாணவன் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இது பற்றி ஆசிரியை லட்சுமி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் காதில் ரத்தம் வடிந்ததால் நேற்று காலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். ஆசிரியை லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் காது ஜவ்வு கிழிந்து விட்டதாக கூறினர். இதையறிந்த மதுரவாயல் பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் வகுப்புக்கு திரும்பினர். ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரைப்படி மாணவன் ராஜா பள்ளியைவிட்டு நீக்கப்படுவான் என தெரிகிறது. அவன்மீது காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பிளஸ் 1 ஆசிரியரை இதே மாணவன் தாக்கிய போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்வி அலுவலர் முயன்றார். அப்போது ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் தலையீட்டினால் மாணவன் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment