ஆவின் பால், பருப்பு, மின்சார முறைகேட்டைத் தொடர்ந்து, ஏழை குழந்தைகள் சாப்பிடும் முட்டையிலும் ஆண்டுக்கு சுமார் ரூ.50 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு, திங்கள் முதல் வெள்ளி வரை சத்துணவு உணவோடு முட்டை வழங்கப்படுகிறது. இந்த சத்துணவு திட்டத்தால், சுமார் 48 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையின் காரணமாக, தரமான முட்டைகளை மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் சாப்பிட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் மூலம் நடந்த முட்டை கொள்முதலில் முட்டையின் தரம், அளவு, உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு சேர்ப்பது எளிதாக இருந்தது. மேலும், சிறு மற்றும் குறு கோழிப்பண்ணையாளர்களும் பயன் அடைந்தனர். மாவட்ட அளவில் என்பதால், முட்டை கொள்முதலில் பெரிய அளவில் மோசடி நடக்கவில்லை என்று பண்ணையாளர்கள் தரப்பு தெரிவித்தது.
மேலும், சந்தையில் விற்கப்படும் சில்லறை விலைக்கே முட்டைகளும் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், 2013ம் ஆண்டு முதல், முட்டை கொள்முதல் நடைமுறையை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே, முட்டையை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து அரசுக்கு சப்ளை செய்து வருகிறது. இந்த நடைமுறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனியார் கடைகளில் ஒரு முட்டை சில்லரை விலையில் ரூ.4க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சத்துணவு திட்டத்துக்கு ஒரு முட்டை ரூ.4.50க்கு அரசு, தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இந்த முட்டைகள்தான் தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. இதனால், ஒரு முட்டைக்கு சில்லறை விற்பனையை விட 50 பைசா அதிகமாக கொடுத்து தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. வழக்கமாக மொத்த கொள்முதல் செய்யும்போது சில்லறை விலையை விட குறைவான விலைக்கே கிடைக்கும். யார் குறைவாக விலை பட்டியல் அளிக்கிறார்களோ, அவர்களுக்குதான் முட்டை சப்ளைக்கான ஆர்டர் கிடைக்கும்.
ஆனால், மாநிலம் தழுவிய முட்டை கொள்முதல் திட்டத்தில், சில்லறை விற்பனையை விட அதிக விலை வைத்து வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு முட்டையை ரூ.3 அல்லது அதற்கும் குறைவாக வாங்கி, கான்டிராக்டர்கள் அதிகவிலைக்கு தமிழக அரசிடம் இருந்து பணம் பெற்று வருவதாக முட்டை உற்பத்தியாளர்கள் புகார் கூறி வருகி றார்கள். மேலும், சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டையின் அளவு சின்னதாக இருந்தால் குறைந்த விலையே வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுபோன்ற எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுப்படுகிறது. தமிழகம் முழுவதும் 85 முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து அரசு கான்டிராக்டர்கள் முட்டை கொள்முதல் செய்கிறார்கள். உற்பத்தியாளர்களுக்கு ஒரு முட்டைக்கு 10 பைசா முதல் 20 பைசா மட்டுமே லாபம் கிடைக்கிறது. அதே நேரத்தில் இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.1 முதல் ரூ.1.05 வரை லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 130 கோடிக்கு மேல் வருவாய் எளிதாக கிடைக்கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டை கொள்முதல் முறைகேடுகள் உணவு பாதுகாப்பு திட்டத்தையே சீர்குலைப்பதாகும். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “மாணவர்கள் சாப்பிடும், சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கு டெண்டர் வழங்கியதில் ஏற்பட்ட ஊழல் நடந்திருப்பது வெட்கக்கேடானது’ என்றார். மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை கொள்ளுமுதலில் கூட முறைகேடு நடந்துள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து சமூகநலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சத்துணவு திட்டத்திற்காக ஒரு முட்டை ரூ.3.19 பைசா விலையில் டெண்டர் ஒப்புதல் கேட்ட நிறுவனத்திடமே ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்யப்பட்டது. டெண்டர் முடிவுக்கு கொண்டு வரும் முன்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால் தனியார் கடைகளில் விற்கப்படும் முட்டை விலையை விட சத்துணவுக்கு வாங்கப்படும் முட்டை கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்றார்.
தமிழ்நாடு கோழி உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் நல்லதம்பி கூறும்போது, “இந்த ஒப்பந்த முறையை கடுமையாக எதிர்க்கிறோம். கடந்த ஆண்டு 22 முட்டை உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாதாரண சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்படுவ தைவிட சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் ஒரு முட்டைக்கு கூடுதல் விலை வழங்கப்பட்டு வருவதால், முட்டை உற்பத்தியாளர்கள் அதிகளவில் பாதித்துள்ளோம்’ என்றார். இவ்வாறு முட்டை கொள்முதலில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முட்டை சப்ளை செய்யும் 2 நிறுவனத்தில் ஒரு நிறுவனம் கர்நாடகா அரசால் தடை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி கான்ட்ராக்ட்டில் முறைகேடு செய்ததாக அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நிறுவனம்தான் தற்போது தமிழகத்தில் சத்துணவுக்கு முட்டை டெண்டர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
* ஒரு நாளைக்கு 48 லட்சம் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது.
* ஒரு ஆண்டுக்கு 220 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
* 2013ல் டெண்டர் மூலம் மாநில அளவில் கொள்முதல் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது.
* 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு முட்டை ரூ. 4.51 பைசா விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
* அதேநேரத்தில் வெளிச்சந்தையில் கடந்த வாரம் மட்டும் சில்லரை விலையில் ஒரு முட்டை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
* முட்டை உற்பத்தியாளர்களுக்கு 10 முதல் 20 பைசா லாபம் கிடைக்கிறது.
* ஆனால், எந்த வேலையும் இல்லாமல், உற்பத்தியாளர்களிடம் இருந்து பள்ளிக்கு எடுத்துச் செல்லும் இடைத்தரகர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.1 முதல் ரூ.1.05 வரை லாபம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment