இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் (என்.ஆர்.ஐ) வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குகின்றன. அதற்கான விதிமுறைகளிலும் சற்று தாராளம் காட்டத்தொடங்கி இருக்கின்றன. அதனால் வெளிநாட்டில் வசித்தாலும் தங்களது சொந்த மண்ணில் வீடு கட்டுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். சிலர் முதலீடு நோக்கத்தில் வீட்டுக்கடன் வாங்கி சொத்தை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கடன் கால அளவு
பெரும்பாலும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் இந்தியாவில் வசிப்பவர்களை போல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரி நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் மற்றொரு காரணமாக இருக்கிறது. அத்துடன் சொத்து வாங்குவதற்கு கையில் இருந்து நாம் செலுத்த வேண்டியிருக்கும் ‘மார்ஜின் மணி’க்கான சதவீத தொகை, கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆகும் காலம் போன்றவையிலும் இங்கு வசிப்பவர்களுக்கு உள்ளதை போல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்கு வரும்போது வீட்டுக்கடன் பெறுவதற்கு முனைப்பு காட்டுகிறார்கள். இங்கு கடன் வாங்குபவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் இருந்து சற்று கூடுதலான ஆவணத்தை அவர்கள் கொடுக்க வேண்டியதிருக்கும். அதாவது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் நகல், பணி புரியும் நாடு, பார்க்கும் வேலை பற்றிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சம்பள சான்றிதழ், இந்தியாவில் இருக்கும் வங்கிக்கணக்கு பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டும்.
வீட்டுக்கடன் வகை
அதுபோல் இங்கு சொத்து வாங்குவது சம்பந்தப்பட்ட தாய் பத்திரம், வீட்டுமனை பத்திரம், வில்லங்க சான்றிதழ், சட்ட நிபுணரின் அறிக்கை, மனை வரைபட அங்கீகார நகல், சொத்து மதிப்பீட்டு அறிக்கை போன்ற விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கடனுக்கான மாத தவணை தொகையை (இ.எம்.ஐ) அந்நிய செலவாணி, வங்கிகள் வாயிலாக செலுத்தலாம். சிலர் முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்கி இருப்பார்கள்.
அந்த சொத்து மூலம் மாதா மாதம் கிடைக்கும் வாடகை பணத்தையும் வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம். அதுபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சொத்து வாங்குவதற்கு மட்டும் வீட்டுக்கடன் வழங்கப்படவில்லை. அவர்கள் சொந்தமாக ஏற்கனவே இங்கு கட்டியிருக்கும் வீட்டுக்கு பராமரிப்பு பணி செய்யவும் வங்கிக்கடன் பெறலாம்.
முதலீடு நோக்கம்
அதாவது வீடு பழுதடைந்து இருந்தால் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வதற்கு கடன் பெறலாம். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவதற்கும் விண்ணப்பிக்கலாம். இப்படி பல வகைகளில் வங்கிகளும், வீட்டு வசதி நிறுவனங்களும் வீட்டுக்கடன் வழங்குகின்றன. இங்கு உள்ளவர்களைப்போல் சில விதிமுறைகள் பொதுவாக இருப்பது வெளிநாட்டு வாழ் இந்தியர்களை வீட்டுக்கடன் வாங்குவதற்கு ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக வட்டிவிகிதம் அதிக அளவில் இல்லாதது அவர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது. அதிலும் வெளிநாட்டில் கணிசமான தொகையை சேமிப்புக்கு ஒதுக்குபவர்கள் இங்கு சொத்து வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக முதலீடு நோக்கத்திற்காக சொத்து வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
சொத்து மதிப்பு உயர்வு
வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இங்கு சொத்து குறைந்த விலைக்கு கிடைப்பது மற்றொரு காரணமாக இருக்கிறது. மேலும் சில ஆண்டுகளில் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்து வருவதும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கு சொத்து வாங்குவதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. அதை கவனத்தில் கொண்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டுமான திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். அதற்கு ஏற்ப முக்கிய பகுதிகளில் அமைந்திருக்கும் பகுதிகளில் முதலீடு நோக்கத்திற்காக சொத்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment