வரலாற்றின் சில பதிவுகள் எப்போதும் ஆறாத ரணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டுச் செல்லும். உலகப் போர்கள், சுதந்திரப் போராட்டங்கள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பதிவுகள் இருந்தாலும், சில நிகழ்வுகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். இந்த வகையில் தெற்கு ஆசியாவில் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட பூகம்பமும், சுனாமியும் உலக வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்திவிட்டது.
2004ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு உலகம் ஓய்வில் இருந்தது. டிசம்பர் 26ம் தேதி பிறந்ததை கடிகாரங்கள் தங்களுக்குள் உறுதி செய்து கொண்டிருந்த நேரம். சரியாக டிசம்பர் 26ம் தேதி பிறந்து 58 நிமிடங்கள் ஆன நிலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் இந்தியப் பெருங்கடலின் கீழ் பகுதியில் 2 கண்டத் தட்டுகள் தங்களுக்குள் மோதிக் கொள்ள, அது 9.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த பூகம்பமாக வெளிப்பட்டது.
பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இந்தியப் பெருங்கடலில் மிகப் பெரிய அளவில் அலைகள் உருவானது. அந்த அலைகள் மணிக்கு 800 கி.மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பயணம் செய்து, முதலில் இந்தோனேஷியாவை துவசம் செய்தது. இந்தோனேஷியாவில் மட்டும் கிட்டத்தட்ட 35 அடி உயரத்துக்கு எழும்பிய கடல் அலைகள், அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளை சூறையாடின. இதன் பின்னர் அங்கிருந்து வேகமாக பயணம் செய்த கடல் அலைகள் இலங்கையின் தென் பகுதியை சிதைத்தது. வங்கக் கடலின் கரையோரம் அமைந்துள்ள தமிழகத்தின் கடற்கரையை, இந்த சுனாமி அலைகள் அலங்கோலம்செய்தன. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் கடற்கரை பகுதிகளை சுனாமி அலைகள் புரட்டிப்போட்டன.
இந்தோனேஷியா, இலங்கை மற்றும் இந்தியா (தமிழகம்) நாடுகளில் இந்த சுனாமியின் தாக்கத்துக்கு இரண்டரை லட்சம் பேர் பரிதாமாக இறந்தனர். இதில் அதிக இறப்புகளை சந்தித்தது இந்தோனேஷியாதான். 2 லட்சம் பேர் இறந்தனர். இலங்கையில் 40 ஆயிரம் பேரும், இந்தியாவில் 20 ஆயிரம் பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுதவிர, சோமாலியா, தாய்லாந்து, மியான்மர், மாலதீவு, மலேசியா, தான்சானியா, சீசெல்ஸ், பங்களாதேஷ் தென் ஆப்பிரிக்கா, ஏமன், கென்யா, மடகாஸ்கர் என்று பல நாடுகளைச் சேர்ந்த மக்களும் சுனாமிக்கு பலியானார்கள். ”ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட அணுகுண்டைப் போல், ஆயிரத்து 500 மடங்கு சக்திமிக்க அதிர்வுகளை இந்த பூகம்பம் ஏற்படுத்தியுள்ளது. அதனால், அதன் பாதிப்புகளும் அதிகமாக இருந்தது” என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் கணித்தனர்.
இந்தோனேஷியாவில் காலை 6 மணிக்கு ஏற்பட்ட சுனாமி அலைகள், இரண்டரை மணி நேரம் கழித்து தமிழகத்தின் கடற்கரையை தாக்கியது. சென்னை மெரீனா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் என்று கொத்து கொத்தாக பலர் நீரில் மூழ்கி பலியானார்கள். பட்டினப்பாக்கம் கடற்கரையில் இருந்த வீடுகளை சுனாமி பதம்பார்த்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலையில் சர்ச்சில் பிரார்த்தனை செய்த 40 பேர் அப்படியே நீரில் மூழ்கினார்கள். கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களையும் சுனாமி அலைகள் உலுக்கியது.
இந்த சுனாமி அலைக்குத் தப்பியவர்களில் பலர், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பலர் தங்கள் குடும்பங்களை இழந்துவிட்டனர். இருப்பினும், அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்ட முயற்சியால் சுனாமியின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டாலும், அதன் ரணங்கள் மட்டும் இன்னும் ஆறவில்லை. கடற்கோள், ஆழிப் பேரலை என்பது போன்ற வார்த்தைகளை இலக்கியங்களில் மட்டுமே கேட்டுப் பழக்கப்பட்ட தமிழர்கள், அதை சுனாமியின் வடிவத்தில் கண்டு, மிரண்ட நாள் டிசம்பர் 26.
இனி சுனாமி பற்றிய குறிப்புகள் சில::
சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சஸ அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.
சுனாமி எப்படி உருவாகிறது?
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.
எப்படியெல்லாம் வரும் சுனாமி?
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.
சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது?
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.
4. அதே சமயம் கடந்த 2004, டிசம்பர் 26ம் தேதியன்று, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த சுனாமியின் கோர தாண்டவத்தால் 2 1/2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மதிப்பிட முடியாத பேரிழப்பை, இச்சுனாமி பேரலைகள் ஏற்படுத்திச் சென்றன. இந்த சம்பவத்தின் 10வது ஆண்டு நினைவு தினம்தான் இன்று அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment