அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளி மாணவி ஒருவர் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ளது, தும்மசின்னம்பட்டி கிராமம். இங்கு கடந்த 2 ஆண்டுகளில் கிட்னி நோய் பாதிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இது தொடர்பாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
ஆனால், ஒரு டாக்டர் குழு அங்கு பெயரளவுக்கு விசாரணை நடத்தி முடித்துக்கொண்டது. எந்த மேல் நடவடிக்கையும் இல்லாத நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த கிட்னி நோய் பாதிப்பில் தன் உறவினரை இழந்த 7ம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி என்பவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் நகலுடன், தனது ஊரில் கிட்னி நோயால் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது பற்றி உருக்கமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்.
இது முதல்வர் அலுவலக பிரிவு அதிகாரிகள் மூலம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வைக்கு சென்றதாக தெரிகிறது. பள்ளி மாணவியால் எழுதப்பட்ட இந்தக் கடிதம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்தை ஈர்த்தது. கடிதத்தில் இருந்த தகவல்களை அதிகாரிகளிடம் உறுதி செய்துகொண்ட முதல்வர் அதிர்ந்து போனார்.
உடனே, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனை வரவழைத்து பள்ளி மாணவியின் புகார் மனுவை கொடுத்து தும்மசின்னம்பட்டி கிட்னி நோய் பிரச்னை குறித்து விரிவாக ரிப்போர்ட் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி இது பற்றி விவாதித்தனர். தும்மசின்னம்பட்டியில் அனைவருக்கும் கிட்னி நோய் தொடர்பான பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
சுகாதாரத்துறையை சேர்ந்த திட்ட இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ் தலைமையிலான சிறப்பு டாக்டர்கள் குழுவினர் தும்மசின்னம்பட்டிக்கு சென்று விரிவாக ஆய்வுகள் நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாராம். இப்போது வாரம் தோறும் மருத்துவ குழுவினர் தும்மசின்னம்பட்டி கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
தும்மசின்னம்பட்டியில் முதல் கட்ட ரத்த பரிசோதனையில் இதுவரை 160 பேர் கிட்டினி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதவிர திருச்சுழி, வேப்பங்குளம் பகுதியிலும் கிட்னி தொடர்பான ரத்த பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கண்ட கிராமங்களில் பரிசோதனைகள் முடிந்த பின்னர் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விரிவான அறிக்கையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சமர்ப்பிப்பார் எனவும், அதன்பின் மேல்சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவி இழந்தபின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். ஓ.பி.எஸ் செயல்பாடு சரியில்லை என்றும், பினாமி அரசை நடத்துகிறார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. ஆனால் சத்தமில்லாமல் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் முதல்வர். மாணவியின் கடிதத்திற்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வரை தும்ம சின்னம்ப்பட்டி கிராமக்கள் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment