Latest News

தப்புக் கணக்கு !

தப்பாய்க் கணக்குப் போடுபவர்
தரமிழந்தே நாளும் நின்றிடுவர்
உப்புக் கணக்கும் சரியாய் இருந்தால்
உண்ணும் உணவும் ருசியைத் தரும்

நட்புக் கணக்கு நலம்பெறவே
நம்பிக்கை என்றும் நிலைத்திடனும்
மதுவில் கணக்கை மறந்திட்டோர்
மரணப்பிடியில் சிக்கிடுவர்

கருவில் இருக்கும் குழந்தையதும்
கணக்கைச் சரியாய் நினைவூட்டும்
மனதில் முளைக்கும் ஆசைகளோ
மதிகெடும் தப்புக் கணக்காகும்

காதலும் மோதலும் தப்பானால்
காலம் முழுக்க வேதனைதரும்
வாழ்தலும் வீழ்தலும் வளமானால்
வாழ்க்கையின் கணக்குகள் சரியாகும்

வேட்டையாடும் விலங்குகளும்
விபரமாய் கணக்கைப் போடுவதால்
காட்டின் ராஜா நானென்று
கர்ஜித்து சொல்லிடும் அதன்கணக்கை

நாட்டையாளும் தலைவர்களும்
நாளைய நிலையைக் கணக்கிட்டால்
கோட்டையில் கொடியினை ஏற்றிடலாம்
கொள்கையில் நிலையாய் இருந்திடலாம்

ஏட்டுக்கணக்கில் தப்பிருந்தால்
ஏகமாய் நடந்திட்ட ஊழல்களே
நாட்டுப் பற்றில் அக்கரையுள்ளோர்
நலமாய் கணக்கினில் கவனம் கொள்வர்

கணக்கினில் தப்பாகிப் போனபின்பு
கலங்கிய விழிகளில் பதில்கிட்டும்
பிணக்குகள் வருமுன் சரிசெய்தால்
தனக்குள் உள்ளமும் அமைதி பெறும்

உனக்குள் இருக்கும் உளத் தூய்மை
உலகை அறியச் செய்திடுவாய்
மணக்கும் உந்தன் மனக்கணக்கை
மனதியில் ஏற்றி வென்றிடுவாய்
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 23-10-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 6 வது நிமிடம் 45 வது நொடியில் வாசிக்கப்படுகிறது.

நன்றி : மெய்சா காக்கா
அதிரை மெய்சா


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.