கடந்த சில வாரங்களாக அதிரை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவது ஒருபுறமிருக்க அதிரையின் சில குளங்களுக்கு போதுமான அளவில் ஆற்று நீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீரை எதிர் நோக்கிருந்த பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பிலும் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது.
செடியன் குளத்திற்கு நீரை கொண்டு வருவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதல் வழிமுறை சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக ஆற்று நீரை கொண்டு வருவது. இது வழமையாக பின்பற்றப்படுவதாகும். இரண்டாவது வழிமுறை ஏரியிலிருந்து நிரம்பி வீணாக கடலுக்கு செல்லும் நீரை, ( மூன்று கண்ணு பாலத்திலிருந்து ) வாய்க்காலிலிருந்து செடியன் குளம் வாழ்வீச் வரை செல்லும் பாதையை சீரமைத்து குளத்திற்கு நீரை கொண்டு வருவது. இந்த வழிமுறையை பின்பற்றி அதிரை இளைஞர்கள் குறிப்பாக மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சியில் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். கடலில் வீணாக சென்று கலக்கும் தண்ணீரை தடுத்து செடியன் குளத்திற்கு திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்புடைய வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், தண்ணீர் வேறு திசைக்கு செல்லாதவாறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக போதுமான மணல் மூடைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். குளம் வரை செல்லும் வாய்க்கால் வரப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பயன்தரும் செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்பதால் கடந்த மூன்று நாட்களாக 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த பணிகளை செய்து வருகின்றனர். தற்போது பள்ளி கல்லூரி விடுமுறை தினங்கள் என்பதால் கூடுதல் இளைஞர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக பிலால் நகர் பகுதியின் வாய்க்கால் ஓரம் வசிக்கும் காலனிவாசிகள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தண்ணீர் வரும் வாய்க்காலில் ஏதேனும் உடைப்புகள் - அடைப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க இளைஞர்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்று பகல் செடியன் குளத்திற்கு ஏரிநீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வித தடங்களுமின்றி ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து சீராக வந்தால் செடியன் குளம் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது. நீர் நிரம்பியவுடன் இதன் இணைப்பில் அடுத்துள்ள கீழத்தெரு செயனாங் குளத்திற்கு தண்ணீர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
களத்திலிருந்து அஜீம்
நன்றி : அதிரைநியூஸ்






















No comments:
Post a Comment