புதுடெல்லி: ‘‘வரதட்சணை விவகாரத்தில் மனைவி இறந்தால், அதற்கு குடும்பத்தின் மற்ற உறவினர்களை விட கணவருக்கே அதிக பொறுப்புள்ளது’’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரியானாவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவரின் மனைவி வரதட்சணை கொடுமையால் கடந்த 2001ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் கணவர், மாமியார், கணவரின் சகோதரர் ஆகியோர் அதிக வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால், வேறுவழியின்றி தற்கொலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் நரேஷ் குமார், அவரது தாய் மற்றும் சகோதரருக்கு கீழ்கோர்ட் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் நரேஷ் குமாரின் தாய் மற்றும் சகோதரருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.
வரதட்சணை வழக்கில் தனது தாய் மற்றும் சகோதரனை விடுவித்ததை போல் தன்னையும் விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நரேஷ் குமார் மனு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தாகூர், ஆதர்ஸ் கோயல் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நரேஷ் குமாரின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில் குடும்பத்தின் மற்ற உறவினர்களைவிட கணவர் வேறுபட்டவர். மனைவியை காக்க வேண்டியது மட்டும் கணவரின் முக்கிய பொறுப்பல்ல; மனைவியுடன் கலந்துரையாடி அவருடைய மனநிலையையும் கணவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். வரதட்சணை விவகாரத்தில் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைவிட, கணவருக்கே அதிக பொறுப்புள்ளது. அதனால் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை சரியானதுதான்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
No comments:
Post a Comment