சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் நகர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல நடந்து கொண்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை மாறுவேடத்தில் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் பணக்கட்டுகளை பரப்பிவிட்டு அதன் மேல் ஒரு வாலிபர் படுத்து இருந்தார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 29) என்பதும், அவர் தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
ராஜ்குமார் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ்(28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான இவர்கள் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் 2 பேரிடம் இருந்தும் 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.
கைதான கொள்ளையன் ராஜ்குமார், தான் கொள்ளையடித்த நகைகளை விற்று அதில் வரும் பணத்தை படுக்கையில் விரித்து தூங்கும் வழக்கத்தை தனது ‘ஸ்டைலாக’ கொண்டு இருந்தார். மேலும் நடிகைகள், துணை நடிகைகளை பணக்கட்டுகள் மீது படுக்க வைத்தும் உல்லாசம் அனுபவித்து வந்ததாக போலீசாரிடம் ராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.
ராஜ்குமார் தான் பணக்கட்டுகள் மீது படுத்து தூங்குவதை தனது செல்போனில் நண்பர் உதவியுடன் படம் பிடித்து வைத்து உள்ளார். அந்த படத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
No comments:
Post a Comment