செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை ஆகியோரை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக செடியன் குளத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்டது.
இதில் பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, செயல் அலுவலர் முனியசாமி, தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவர் PMK தாஜுதீன், 16 வது வார்டு உறுப்பினர் N.A முஹம்மது யூசுப், 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்தீப், திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், TIYA நிர்வாகிகள் உள்ளிட்டோர் செடியன் குளத்தை பார்வையிட்டனர்.
பொதுவாக செடியன் குளத்திற்கு ஆற்று நீரை கொண்டு வருவதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது வழிமுறை சிஎம்பி வாய்க்கால் மூலம் ஆற்று நீரை கொண்டுவருவது. இது வழமையாக பின்பற்றப்படுவது. இந்த வழிமுறை மூலமே கடந்த காலங்களில் செடியன் குளத்திற்கு சிஎம்பி வாய்க்காலிலிருந்து மகிழங்கோட்டை பெத்தான் குளம் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலப்போக்கில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை, அரசியல் சூழல், கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஆர்வலர்கள், வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வருவதில் கடந்த இரண்டு வருடங்களாக தடை ஏற்பட்டது.
மற்றொரு வழிமுறையாக, வீணாக கடலில் கலக்கும் ஏரி நீரை மோட்டார் பம்பிங் மூலம் குளத்திற்கு கொண்டுவருவது. குறிப்பாக ஏரியிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால் வழியாக கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது. எதற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, வாய்க்காலிலிருந்து குளங்கள் வரை செல்லும் பாதையை சீரமைத்து செடியன் குளத்திற்கு மோட்டார் பம்பிங் மூலம் நீரை கொண்டு வரலாம்.
இது குறித்து அதிரை வாழ் சமூக ஆர்வலர்களின் கவனத்துக்கு எடுத்துசெல்லும் விதமாக அதிரை நியூஸில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
களத்திலிருந்து நூவன்னா
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment